×

‘விங்க் டு பிளை’ திட்டத்தின் மூலம் துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்லும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்: மேயர் பிரியா வாழ்த்து

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ‘விங்க் டு பிளை’ திட்டத்தின் மூலம்  2022-23ம் கல்வியாண்டில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர் மே மாதம் துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்கின்றனர். அவர்களுக்கு மேயர் பிரியா வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி கல்வித்துறையானது ‘விங்க் டு பிளை’ என்ற திட்டத்தை ரோட்டரி கிளப் ஆப் மெட் ராஸ் ஈஸ்ட் அமைப்பின் வாயிலாக கடந்த 7 வருடங்களாக நடத்தி வருகிறது. இதில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியரை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்து சென்று வருகின்றனர்.

அதன்படி, 2016ம் ஆண்டு மலேசியாவிற்கும், 2017ம் ஆண்டு ஜெர்மனிக்கும், 2018ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நாசாவிற்கும், 2019ம் ஆண்டு சிங்கப்பூருக்கும், 2022ம் ஆண்டு லண்டன் நகருக்கும் மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்று வந்துள்ளனர். 2020 மற்றும் 2021ம் ஆண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடு அழைத்து செல்ல இயலாத காரணத்தினால், அவர்களின் சாதனையை பாராட்டி மடிக்கணினிகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், 2022-23ம் கல்வியாண்டில் ‘விங்க் டு பிளை’ திட்டத்தின் மூலம்  சென்னை பள்ளிகளில் “தொழில் முனைவோர் திறன் மேம்பாடு” என்ற தலைப்பில் மூன்று நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் சுற்றில் பள்ளி அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 478 மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 மாணவர்களுக்கு இறுதிச் சுற்றுக்கான போட்டிகள் கடந்த டிச.25ம் தேதி நடத்தப்பட்டது. இதில் 8 மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்றனர்.  வெற்றி பெற்ற மாணவர்களை வரும் மே மாதம் கல்வி சுற்றுலாவாக ஐக்கிய அரபு நாடான துபாய்க்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 8 மாணவ, மாணவியரை மேயர் பிரியா நேற்று பாராட்டிச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். நிகழ்ச்சியில்  துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அரி, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) விஸ்வநாதன், ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் ஈஸ்ட் தலைவர் ராமகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

துபாய் செல்லும் மாணவ, மாணவியரின் விவரம்
வ. எண்    மாணவர் பெயர்    வகுப்பு    பள்ளி
1.    விஷால்    11    சென்னை மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம்    
2.    மைதிலி    9    சென்னை பெண்கள்
மேல்நிலைப்பள்ளி,  
புல்லா அவென்யூ    
3.    லோக்பிரியன்    11    சென்னை மேல்நிலைப்பள்ளி, வேளச்சேரி    
4.        வர்ஷினி    11    சென்னை பெண்கள்
மேல்நிலைப்பள்ளி,
சைதாப்பேட்டை
5.    திவ்யதர்ஷினி    9    சென்னை பெண்கள்
மேல்நிலைப்பள்ளி,
மார்க்கெட் தெரு    
6.    முகேஷ்    11    சென்னை மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம்    
7.    கிஷோர்      11    சென்னை ஆண்கள் மேல்
நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம்  
8.    பிரத்யங்கா    11    சென்னை மேல்நிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர். நகர்

Tags : Dubai ,Mayor ,Priya , Municipal school students going on educational tour to Dubai through 'Wink to Fly' programme: Mayor Priya congratulates
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...