கொதிக்கும் குழம்பில் எஸ்ஐயை தள்ளிவிட்ட தொழிலாளி கைது

புதுக்கோட்டை: திருச்சி திருவெறும்பூரை சேர்ந்தவர் தங்கராஜ். கட்டிடத் தொழிலாளி. இவர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ஓலைமான்பட்டியை சேர்ந்த சின்னத்தம்பி மகள் ரஞ்சிதம் என்பவரை திருமணம் செய்தார். இவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், சில மாதங்களுக்கு முன்பு ரஞ்சிதம் அவரது தந்தையான சின்னத்தம்பி வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் மாமனார் வீட்டிற்கு நேற்று சென்றிருந்த தங்கராஜ் தன் மனைவி ரஞ்சிதத்தை அடித்துள்ளார். இதுகுறித்து ரஞ்சிதத்தின் தந்தை சின்னத்தம்பி, இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இலுப்பூர் எஸ்ஐ ராஜூ மற்றும் காவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரணைக்காக ஓலைமான்பட்டியுள்ள சின்னதம்பி வீட்டிற்கு சென்றனர். அங்கு தங்கராஜ் மனைவி ரஞ்சிதம் வீட்டு வாசலில் விறகு அடுப்பில் குழம்பு வைத்துக்கொண்டு இருந்தார்.

தங்கராஜ் வீட்டிற்குள் இருந்தார். இதனையடுத்து போலீசார் தங்கராஜை வெளியே அழைத்தனர். ஆனால் தங்கராஜ் வெளியே வர மறுத்ததால் காவலர் ராதாகிருஷ்ணன் வீட்டிற்குள் சென்று தங்கராஜை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தார். வெளியே நின்ற எஸ்ஐ ராஜூவும் பிடித்து இழுத்துள்ளார். அப்போது தங்கராஜ், எஸ்ஐ ராஜூவை தள்ளிவிட்டதில் எதிர்பாராமல் அருகில் இருந்த அடுப்பில் கொதிக்கும் குழம்பில் விழுந்ததில் எஸ்ஐயின் முதுகு பகுதி காயமடைந்தது. இதையடுத்து, அவர் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து எஸ்ஐ ராஜு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர்.

Related Stories: