கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமியின் வயிற்றிலிருந்து 1 கிலோ தலைமுடி அகற்றம்

திருமலை: கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமியின் வயிற்றிலிருந்து 1 கிலோ தலைமுடி அகற்றப்பட்டது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று 12 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்து 1 கிலோ தலைமுடி அகற்றப்பட்டது. இதுகுறித்து டாக்டர்  பொட்லூரி வம்சிகிருஷ்ணா கூறியதாவது: குடிவாடா நகரை  சேர்ந்த 12 வயது சிறுமி நீண்ட நாட்களாக வயிற்று வலி, வாந்தி, உடல் எடை குறைவால் அவதிபட்டுள்ளார். குடும்பத்தினர் அவரை குடிவாடாவில் உள்ள ராமா நர்சிங் ஹோமில் சேர்த்தனர். அங்கு எண்டோஸ்கோபி மற்றும் ஸ்கேனிங் மூலம் வயிற்றில் கருப்பு கட்டி இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.  

அதனை அகற்ற  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில், சிறுமியின் வயிற்றில் தலைமுடி இருப்பது அடையாளம் காணப்பட்டது. இதை மருத்துவ மொழியில் ‘டிரைக்கோபெசோர்’ என்று அழைக்கப்படுகிறது. சிலருக்கு சிறு வயதிலிருந்தே முடி சாப்பிடும் பழக்கம் இருக்கும். ஒரு சிறிய அளவு தலைமுடியாக இருந்தால் வெளியே வந்து விடும். ஆனால், இந்த சிறுமி  நிறைய முடி சாப்பிட பழகி விட்டாள். அது வயிற்றில் குவிந்து செரிமான மண்டலத்தில் ஒரு பெரிய கட்டியாக உருவானது. 1 கிலோ எடை உள்ள முடிகள் செரிமான மண்டலத்தை நிரப்பி உள்ளது.

இதனால், சாப்பிட்ட உணவு வயிற்றில் இருந்து வெளியேறுவதாகவும், மீதம் உள்ள உணவு செரிமானமாகாமல் உடல் ஆற்றல் இழக்கப்பட்டு வந்துள்ளது.  இதனால், சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த சோகை உள்ளவர்கள் இந்த மாதிரியான தலைமுடி சாப்பிட பழக்கி கொள்வதால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Related Stories: