2023-2024ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தாக்கல்: மக்களவை தேர்தலுக்கு புதிய மின்னணு இயந்திரம் வாங்க ரூ.1900 கோடி

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் கிட்டத்தட்ட ரூ.1,900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு 9 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. அதே போல் அடுத்த ஆண்டு மத்தியில் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க வேண்டும் என்று சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதை ஏற்று தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தேர்தல் ஆணையத்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க ரூ.1,891 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயாரித்து கொடுக்கும் பொதுத்துறை நிறுவனங்களான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் ஆகியவற்றிலிருந்து மின்னணு இயந்திரங்கள் வாங்கப்படும். மேலும் கடந்த 2004 முதல் 4 மக்களவை, 139 சட்டசபை தேர்தல்களில் இந்த மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் சேதம் அடைந்த இயந்திரங்களும் மாற்றப்பட உள்ளன.

* ரயில்வேக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு

பட்ஜெட்டில் ரயில்வேயில் பல்வேறு திட்டப்பணிகளுக்கான மூலதன செலவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2013-14ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட 9 மடங்கு அதிகமாகும். நாடு முழுவதும் நிலக்கரி, உரம் மற்றும் உணவு தானியங்களை கொண்டு சேர்க்க, 100 முக்கிய போக்குவரத்து உட்கட்டமைப்பு திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தனியார் பங்களிப்பு ரூ.15 ஆயிரம் கோடி உட்பட மொத்தம் ரூ.75 ஆயிரம் கோடி முதலீட்டில் முன்னுரிமை அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ மற்றும் தேஜஸ் போன்ற முதன்மை ரயில்களின் 1,000க்கும் மேற்பட்ட பெட்டிகளை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது. இந்த பெட்டிகளின் உட்புறம் நவீன தோற்றத்துடன் மேம்படுத்தப்பட்டு பயணிகளின் வசதிக்காக மேம்படுத்தப்படும். மேலும், அதிவேக வந்தே பாரத் ரயில்களுக்கான பாதை புதுப்பித்தலுக்கான ஒதுக்கீடு இந்த ஆண்டு ரூ.17,296.84 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2022-23ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது, அதில் ரூ.1.37 லட்சம் கோடி மூலதனச் செலவினங்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

* ரூ.7000 கோடியில் இ-கோர்ட்

செயல்திறன் மிக்க நீதி நிர்வாகத்துக்காக இ நீதிமன்றங்கள் திட்டத்தின் மூன்றாவது கட்ட பணிகளுக்கு ரூ.7ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ஏழை கைதிகளுக்கு நிதியுதவி

சிறையில் அபராதம், ஜாமீன் பணம் செலுத்த முடியாமல் அவதிப்படும் ஏழை கைதிகளுக்கு தேவையான நிதியுதவி அளிக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

* வரி பிரச்னைகள் தீர்க்க திட்டம்

வணிக பிரச்னைகளை தீர்ப்பதற்கான மற்றொரு சர்ச்சை தீர்வு திட்டமாக விவாத் சே விஸ்வாஸ்-2 திட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலமாக சர்ச்சைக்குரிய வரி, சர்ச்சைக்குரிய வட்டி, சர்ச்சைக்குரிய அபராதம்  அல்லது மறுமதிப்பீட்டு உத்தரவு தொடர்பாக சர்ச்சைக்குரிய கட்டணங்களை தீர்ப்பதற்கு விவாத் சே விஸ்வாஸ் உதவும்.

* ரூ.10 ஆயிரம் கோடியில் 500 மறுசுழற்சி ஆலைகள்

கழிவுகளை மறுசுழற்சி செய்து பணம் ஈட்டும் வகையில், மறுசுழற்சி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக கோவர்தன் திட்டத்தின் கீழ், 500 புதிய மறுசுழற்சி ஆலைகள் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கான மாறுவதற்கான வசதிகளை அரசு செய்து தரும் எனவும் நிதி அமைச்சர் அறிவித்தார்.

Related Stories: