×

சாமானிய மக்களுக்கு பலன் தரும் பட்ஜெட்; வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்..!

டெல்லி: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் சிறப்பான பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2023-24ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்; நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் சிறப்பான பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

இது தொடர்பாக பேசிய அவர்; ஒன்றிய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டின் மூலம் புதிய இந்தியாவிற்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் சிறப்பான பட்ஜெட்; அனைவருக்கும் பலன் அளிக்கும் பட்ஜெட். அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் பட்ஜெட் இது. விவசாயிகள், நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் பலன் தரும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பட்ஜெட் மூலம் ஊக்கம் கிடைக்கும். பட்ஜெட்டில் உலகின் மிகப்பெரிய உணவு சேமிப்பு திட்டம் இடம்பெற்றுள்ளது.

பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. மகளிர் சுய உதவிக்குழுக்கள், கூட்டுறவுத்துறைக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்தது பாராட்டத்தக்கது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதன் மூலம் அவர்கள் சுயமுன்னேற்றம் அடைய வகை செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது சிறப்பானது. கூட்டுறவுத்துறைக்கான நிதி ஒதுக்கீடு மூலம் கிராமப்புறங்களில் வேளாண்மை, சிறுதொழில்கள் மேம்படும். வேளாண்துறையில், டிஜிட்டல் நுட்பங்களை பயன்படுத்த, மத்திய பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள், பழங்குடியினர் பலன் பெறுவார்கள். நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு அடைய பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. புதிய முதலீடுகள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் இவ்வாறு கூறினார்.


Tags : Narendra Modi , A budget that benefits the common man; Prime Minister Narendra Modi hailed as a historic budget..!
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...