×

வில்லிவாக்கத்தில் கடைகளுக்கு நிவாரணம் கோரி வியாபாரிகள் சாலை மறியல்

அம்பத்தூர்:  சென்னை வில்லிவாக்கம் அடுத்த நியூ ஆவடி சாலை காந்தி நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. கடந்த 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் 470 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்கு 72 கடைகள் ஒதுக்கி தரப்பட்டது. தற்போது, கட்டிடங்கள் பழுதடைந்து இருப்பதால் இடித்து புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்கும் பணி நடந்து வருகிறது. குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மாற்று வீடு வழங்கப்பட உள்ள நிலையில், 72 கடைகள் குறித்து எந்த தகவலும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை முதல்கட்டமாக 72 கடைகளையும் இடிப்பதற்காக அண்ணாநகர் 8வது மண்டல அதிகாரிகள் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் வந்தனர். இதை அறிந்ததும் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி தலைமையில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகளுடன்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் வெள்ளையன் தலைமையில் நிர்வாகிகளும் அங்கு  வந்தனர். அவர்கள், திடீரென 72 கடைகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கக்கோரி குடியிருப்பு எதிரேயுள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஐசிஎப் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 72 கடைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் வியாபாரிகளிடம் தெரிவித்தனர். இதனால் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து கடைகள் இடிப்பு பணியை கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Williwak , Traders block road demanding relief for shops in Williwak
× RELATED வில்லிவாக்கத்தில் பணம் வைத்து...