×

பணி நியமனத்தில் முறைகேடு சேலம் பெரியார் பல்கலையில் அரசு குழு விசாரணை துவக்கம்: 2 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க ஆணை

ஓமலூர்: சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனம், முறைகேடாக பணியில் சேர்த்தது, முறைகேடாக பதவிகள் வழங்கியது குறித்து அரசு நியமித்த குழுவின் விசாரணை துவங்கி உள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குநர் நியமனத்தில், பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாதது, பல்கலைக்கழக நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ஆகிய பதவிகள் இடஒதுக்கீடு ஆணைப்படி நியமிக்காதது, தமிழ் துறை தலைவர் பெரியசாமி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள், பெரியசாமி கொடுத்துள்ள போலிச்சான்று, தகுதியின்மை ஆகியவை குறித்து அரசுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த விசாரணை குழு அமைத்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி, அரசு இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட குழு நேற்று காலை பல்கலைக்கழகம் வந்து விசாரணையை தொடங்கியது. 2 மாதங்களுக்குள் தங்களது விசாரணை அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். முதற்கட்டமாக ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். தமிழ் துறை தலைவர் பெரியசாமியை விட பலரும் சீனியராக இருக்கும் நிலையில், இவரை ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம் செய்ய பரிந்துரை செய்தது, விதிகளுக்கு புறம்பாக அவரையே  ஆட்சிக்குழு உறுப்பினராக 2 முறை நியமித்தது, அரசு உதவி பெறும்  கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கும் குழுவில் விதிகளுக்கு புறம்பாக பெரியசாமியை நியமித்தது, பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய  நெல்சனை துணைவேந்தரின் உதவியாளராகவும், குழந்தைவேல் என்பவரை முக்கிய பொறுப்பிலும் முறைகேடாக நியமனம் செய்தது உள்ளிட்ட புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது.

Tags : Salem Periyar University , Govt committee starts inquiry into appointment malpractice in Salem Periyar University: Order to submit report in 2 months
× RELATED சேலம் பெரியார் பல்கலை சிண்டிகேட்...