×

புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை: சைபர் கிரைமில் நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்

சென்னை: தனது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் கிரைமில் நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். பாஜகவில் வெளிநாடு மற்றும் வெளி மாநில கலாசார பிரிவின் தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இவருக்கும் பாஜ தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் உருவானது. இதையடுத்து காயத்ரி ரகுராம், அண்ணாமலை குறித்து பரபரப்பான குற்றச்சாட்டை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதனால் காயத்ரி ரகுராம், அண்ணாமலை இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

இதைத் தொடர்ந்து காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் காலம் முடிவதற்குள் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். அண்ணாமலை குறித்து பரபரப்பு குற்றச்சாட்டையும் தெரிவித்தார். மேலும் நடை பயணம் செய்ய இருப்பதாகவும் அறிவித்தார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில்  “அண்ணாமலை வார்ரூம் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு மார்பிங் திறன்களைப் பயிற்றுவிப்பது போல் தெரிகிறது. பாஜகவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் நம் இந்தியாவிற்கும், அண்ணாமலையின் தலைமை பெண்களுக்கு ஆபத்தானது” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தன்னை சிலர் ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்புவதாக சைபர் கிரைமில் ஆன்லைன் மூலமாக புகார் நடிகை காயத்ரி ரகுராம் புகார் அளித்தார். சமூக வலைதளத்தில் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்தநிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் தனது டுவிட்டரில் காயத்ரி ரகுராம் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டு ஆபாசமாக திட்டியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Kayatri Raguram , Action against BJP official who morphed photo and published obscenity: Actress Gayatri Raghuram complains about cybercrime
× RELATED நடிகை காயத்ரி ரகுராம் நிருபர்களுடன் வாக்குவாதம்