×

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நிற்கக்கோரி நாளை ரயில் மறியல்: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளயிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இங்கிருந்து கல்வி - வேலைவாய்ப்புகளுக்காக சென்னை மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ரயிலில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மணப்பாறையைச் சுற்றிலும் ஏராளமான சிறு தொழில் முனைவோர் உள்ளனர். புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயத்த ஆடைகள் தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இதுதவிர,  தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் இரண்டாம் அலகு தொழிற்சாலையும், தமிழ்நாடு முதலமைச்சரால் அண்மையில் தொடங்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையும் மணப்பாறையில் உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் ஏறத்தாழ ஐந்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அகல ரயில் பாதை அமைக்கப்படுவதற்கு முன்பு மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று சென்றன. அதனால்தான் மணப்பாறை முறுக்கு உலகப் புகழ் பெற்றது. பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் ஒரு சில துரித ரயில்கள் நின்று செல்கின்றன.

மதிமுக நடத்திய போராட்டங்கள் காரணமாக திருவனந்தபுரம் செல்லும் இண்டர்சிட்டி ரயில் வைகை துரித ரயில் மணப்பாறையில் நின்று செல்கின்றது. சென்னை - மதுரை செல்லும் பாண்டியன் துரித ரயில், வாரம் மூன்று முறை இயக்கப்படும் ராமேசுவரம்-திருப்பதி துரித ரயில்,  தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகின்ற அந்த்யோதயா உள்ளிட்ட மணப்பாறை வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும்  மணப்பாறையில் நின்று செல்ல கேட்டுக்கொள்கிறேன். மணப்பாறையில் அனைத்து ரயில்களையும் நிறுத்திட வேண்டும் என்கிற கோரிக்கை பொதுமக்களிடம் தற்போது வலுத்து வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி  ஜன.30ம் தேதி (நாளை) மணப்பாறை சட்டமன்றத் தொகுதி மதிமுக சார்பாக ரயில் மறியல் போராட்டம் மணப்பாறையில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Manaparai ,WAICO , Train picket tomorrow to stop all trains at Manaparai: WAICO announces
× RELATED மணப்பாறையில் சிப்காட் பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி