வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா 100 சேவல், 150 கிடாய் வெட்டி 2500 கிலோ அரிசியில் பிரியாணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருமங்கலம்: புகழ்பெற்ற வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் பொங்கல் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது இதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 100 சேவல்கள் மற்றும் 150 கிடாய்கள் வெட்டப்பட்டு கமகம பிரியாணி பிரசாதமாக  வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ளது வடக்கம்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் ஊரணி கரையில் அமைந்துள்ளது முனியாண்டி சுவாமி கோயில்.

முழு உருவத்துடன் நின்ற கோலத்தில் இந்த கோயிலில் முனியாண்டி சுவாமி காட்சியளிக்கிறார். இந்த சுவாமியின் பெயரில் நடைபெறும் முனியாண்டி விலாஸ் ஓட்டல்கள் தமிழகம் முழுவதும் அமைந்துள்ளன. இந்த ஓட்டல் அதிபர்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு ஆண்டும் தை  இரண்டாம் வெள்ளிக்கிழமையும், மாசி இரண்டாம் வெள்ளிக்கிழமையும் வடக்கம்பட்டி கிராமத்தில் பொங்கல் திருவிழா நடத்தி வருகின்றனர்.

இந்த கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தும் ஆட்டுக்கிடாய்கள், சேவல்களை கொண்டு  அசைவபிரியாணி தயாரித்து கோயில் பிரசாதமாக விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இதனால் இந்த திருவிழாவையை பிரியாணி திருவிழா நேற்று பொதுமக்கள், பக்தர்கள் அழைத்து வருகின்றனர். நேற்று 88ம் ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பக்தா்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.

நேற்று காலை முனியாண்டி சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி வடக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடம்குடமாக பால் கொண்டுவந்தனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு நிலைமாலை ஊர்வலம் துவங்கியது. வடக்கம்பட்டி, பொட்டல்பட்டி, அலங்காரபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூ, மாலை, தேங்காய், பழம் ஏந்திய மலர்தட்டுகளை தலைசுமையாக எடுத்து நிலைமாலையுடன் வடக்கம்பட்டி கிராமத்தின் முக்கிய பகுதிகளில்  மேளதாளம், அதிர்வெட்டுகள் முழுங்க ஊர்வலமாக வந்தனர்.

இந்த ஊர்வலத்தின் முன்பு பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து வந்தனர். இரவு 8 மணியளவில் நிலைமாலை ஊர்வலம் கோயிலை அடைந்தது. அங்கு நிலைமாலை கோயிலில் சுவாமிக்கு சாற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த தேங்காய், பழங்கள் சுவாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழாவில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற்றியதை தொடர்ந்து கொண்டு வந்த ஆட்டுக்கிடாய்கள், சேவல்களை காணிக்கையாக வழங்கினர்.

நள்ளிரவு 1 மணிக்கு சக்திகிடாய் பலியிடப்பட்டது.  தொடர்ந்து காணிக்கையாக வழங்கப்பட்ட 150 ஆடுகள், 100 சேவல்களை கொண்டு முனியாண்டி சுவாமிக்கு 2500 கிலோ அரிசியில் அசைவ பிரியாணி தயாரிக்கப்பட்டது. அதிகாலை 4 மணியளவில் சுவாமிக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அசைவ பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது. அதிகாலை 4 மணி முதலே வில்லூர், கள்ளிக்குடி, திருமங்கலம், விருதுநகர், டி.கல்லுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து அசைவ பிரியாணியை வாங்கி சென்றனர். திருவிழாவையொட்டி இரவில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories: