×

மாற்றுத்திறனாளிகள் ஏறும் வகையில் பஸ்களின் பின்புறம் சாய்தள பாதை அமைக்க முடியாது: தொழில்நுட்ப சிக்கல் உள்ளது, ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: மாற்றுத் திறனாளிகள் ஏறும் வகையில் பஸ்களின் பின்புறம், சாய்தள பாதை அமைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107 பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில், தாழ்தள பேருந்துகளையும் சேர்க்க உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பேருந்துகளின் பின்புறம் மாற்றுத் திறனாளிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில்  சாய்தளம் பாதை அமைக்க முடியுமா என்பது குறித்து தெரிவிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.  இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, பேருந்தின் பின்புறம் சாய்தளப்பாதை அமைப்பதால் பேருந்தை இயக்குவதில் சிரமம் ஏற்படும். அதேசமயம் 900 மற்றும் 650 மில்லி மீட்டர் உயரம் கொண்ட தளங்களுடன் கூடிய பேருந்துகளை விற்பனை செய்ய உற்பத்தி நிறுவனங்கள் தயாராக உள்ளன.

ஆனால் 400 மில்லி மீட்டர் உயரத்திலான தாழ்தள பேருந்துகளை விற்பதற்கு ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே தயாராக உள்ளது. மற்ற நிறுவனங்கள் இந்த தாழ்தள பேருந்துகளை தயாரிக்க ஆர்வம் காட்டவில்லை. அதாவது, 900 மில்லி மீட்டர் உடைய பேருந்துகளாக இருந்தால் லிப்ட் வசதியுடன் அமைக்க முடியும். 650 மில்லி மீட்டர் உயரமுடைய பேருந்தாக இருந்தால் சாய்தள வசதியுடன் அமைக்க முடியும். பேருந்து கொள்முதல் தொடர்பான டெண்டர் பிப்ரவரி 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த ஏதுவான பேருந்துகளைதான் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

ஏதோ ஒரு பேருந்தை வழங்கிவிட்டு அதில் தான் பயணிக்க வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. ஒரே நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் தாழ்தள பேருந்துகளாக இயக்க வேண்டுமென்று வலியுறுத்தவில்லை. 10 சதவீதத்திற்கும் குறைவான பேருந்துகளைத்தான் இயக்க கோருகிறோம் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இருவகையான பேருந்துகளும் எவ்வாறு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக இயக்கப்படும் என்பது தொடர்பான செய்முறை விளக்கத்தை வழங்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : iCourt , Can't make ramp at rear of buses for PWDs to board: Technical problem, govt informs ICourt
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...