×

நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி அணிக்கு செக் வைக்க அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியை தூண்டிவிட்ட பாஜ: அரசியல் குழப்பத்தில் எதிர்க்கட்சிகள் தவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு செக் வைப்பதற்காக, அதிமுகவின் பன்னீர்செல்வம் அணியை தூண்டி விட்டு தேர்தல் களத்தில் யாரும் வேட்பாளர்களை நிறுத்த முடியாமல் அரசியல் குழப்பத்தை பாஜ ஏற்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் மேற்கு மண்டலம் என்பதால் எடப்பாடி அணி சார்பில், முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், இடைத் ேதர்தலில் போட்டியிட சம்மதித்திருந்தார்.

இந்நிலையில் ஜிகே.வாசனிடம்  வேட்பாளரை நிறுத்தும்படி பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டார். ஆனால்,அரசியல் விளையாட்டில் இருந்து தப்பிக்க வேட்பாளரை நிறுத்த விருப்பமில்லை என்று வாசன் கூறிவிட்டார். இந்நிலையில், அண்ணாமலை வேட்பாளரை நிறுத்த முடிவு செய்திருந்தார். ஆனால், மேலிடமோ வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று கூறிவிட்டது. இதனால் அதிமுகவை ஆதரிக்க முடிவு செய்திருந்தார். அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்திருக்கும் தகவல் அண்ணாமலைக்கு தெரியவந்தது. இதனால் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்ட அண்ணாமலை, வேட்பாளரை நிறுத்துங்கள்.

உங்களுக்குத்தான் இரட்டை இலை கிடைக்கும். இல்லாவிட்டால் இருவருக்குமே கிடைக்காது. அதிமுக முடக்கப்படும். அப்போதுதான் உங்களை எடப்பாடி தேடி வருவார் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால்தான் வேட்பாளரை நிறுத்த பன்னீர்செல்வம் முடிவு செய்தார். அவருக்கு மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு ஆடிட்டரும் ஆதரவு தெரிவித்தார். இதனால், அவர் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளார். பன்னீர்செல்வத்துக்கு பெரிய அளவில் ஆதரவு மேற்கு மண்டலத்தில் இல்லை. ஆனால் அந்த தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முதலியார் சமூக வேட்பாளர் ஒருவரை நிறுத்த பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.

அதேநேரத்தில் எடப்பாடி அணியில் வேட்பாளராக நிற்க முடிவு செய்திருந்த கே.வி.ராமலிங்கம், இரட்டை இலை கிடைக்காது என்பதால் போட்டியிட மறுத்து விட்டார். செலவு செய்து பணமும் வீணாகிவிடும், டெபாசிட்டும் கிடைக்காது, என்று பயந்து ஒதுங்கிவிட்டார். இதனால் வேட்பாளர் கிடைக்காமல் எடப்பாடி பழனிசாமி திணறி வருகிறார். அதேநேரத்தில் எந்த கவலையும் இல்லாமல் பன்னீர்செல்வம் உள்ளார்.ஓ.பன்னீர்செல்வத்தை தூண்டிவிட்டு பாஜ வேடிக்கை பார்ப்பதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனால்தான் அதிமுகவில் எந்த அணிக்கும் ஆதரவு தராமல் பாஜ நடுநிலை வகிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி கொடுக்கும் தொகுதியை வாங்க வேண்டிய நிலை பாஜவுக்கு உள்ளது. பன்னீர்செல்வம் பிரிந்து தனித்துப் போட்டியிட்டு ஓட்டுகள் குறைந்தால், நாடாளுமன்ற தேர்தலில் நாம் சொல்வதைத்தான் எடப்பாடி கேட்க வேண்டிய நிலை உருவாகும் என்று அண்ணாமலை கணக்குப்போடுகிறார். இதனால்தான் பன்னீர்செல்வத்தை தூண்டிவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், பாஜவின் ஆதரவு தேவையே இல்லை. வேண்டும் என்றால் ஆதரிக்கட்டும். இல்லாவிட்டால் தனித்துப் போட்டியிட்டு செல்வாக்கை காட்ட தயார் என்று முடிவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, 111பேர் கொண்ட மெகா பட்டியலை வெளியிட்டார். இதனால் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து குழப்பமான நிலை நிலவுகிறது.


Tags : Edabadi ,Czech ,Baja ,Panneerselvam , BJP incites AIADMK O. Panneerselvam team to check Edappadi team in parliamentary elections: Opposition parties in political chaos
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...