×

திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இடபற்றாக்குறை: வீணாகும் நெல்மூட்டைகள்; விவசாயிகள் பாதிப்பு

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை வைப்பதற்கு போதிய இடம் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். திருவெண்ணெய்நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  உழவு முதல் அறுவடை வரை நெல் சாகுபடி செய்வதற்கு ஏக்கர் ஒன்றுக்கு  27 முதல்  30 ஆயிரம் ரூபாய் வரை உற்பத்திக்கான செலவாகிறது.

விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த நெல்மணிகளை விற்பனைக்காக  வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் அங்கு, நெல் மூட்டைகளை இருப்பு வைக்க போதிய இடமில்லாமல்  தெருவோரங்களில் கொட்டி விற்பனைக்காக வைக்க வேண்டிய நிலை உள்ளது.  இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகளிடமும், பொது மக்களிடமும் விவசாயிகள் திட்டு வாங்கும் அவலம்  தொடர்ந்து இருந்து வருகிறது.

மேலும் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகளை தெருவோரம் வைக்கவேண்டிய நிலை உள்ளதால், அதன் மீது நாய்கள் சிறுநீர் கழிக்கின்றன,தெரு நாய்கள்  செத்து அழுகிய எலிகளை கடித்து, குதறி நெல்லின் மீது போட்டு பிராண்டி  நெல்களை வீணாக்கி நாசம் செய்கின்றன. மேலும் இதனால் பிளேக் போன்ற நோய்களைப் பரப்பும் அபாயம் உள்ளது.  இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் எந்த ஒரு மேல் நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை.

இதுகுறித்து விவசாயி ரமேஷ் கூறுகையில், கோணிப்பை வாங்க கூட காசில்லாமல் அறுவடை செய்த நெல்மணிகளை மூட்டை பிடிக்காமல் அப்படியே டிராக்டரில் அள்ளி வந்து நடுத்தெருவில் கொட்டிவிட்டு, பனியில் படுத்து, கண்விழித்து, காவல் காக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் கடந்த 21ம் தேதி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளில் மூட்டைக்கு 2 முதல் 9.5 கிலோ வரை ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டமும் செய்தனர்.  ஆனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது இதுவரை அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நெல்மணிகளை விற்று, வாங்கிய கடனை வட்டியோடு கட்டுவதற்குள், கடனுக்கான வட்டி கழுத்தை  நெறிக்கும் போது இப்படிப்பட்ட இடர்பாடுகளையும் விவசாயிகள் சந்திக்க நேரிடுகிறது என கவலையுடன் தெரிவித்தார்.

47 ஆண்டுகள் பழமையான ஒழுங்குமுறை விற்பனை கூடம். திருவெண்ணெய்நல்லூர் விற்பனை கூடம் கடந்த 1975 முதல் பேரூராட்சிக்கு சொந்தமான பேரூராட்சி அலுவலக வளாகத்தில் 2 பழைய ஷெட்டுகளை மட்டுமே கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. 47 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த ஒரு வளர்ச்சியும் முன்னேற்றமும் கொண்டு வருவதற்கு எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறையினர் அளித்த தகவலின்படி குடோன்கள் கட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தால் கால தாமதம் ஆகின்றது எனவும், மேலும் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சின்னசெவலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கிருபாபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு நில உரிமை தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கருத்துருவிற்காக அனுப்பியுள்ளோம் எனவும், நில உரிமை மாற்றம் செய்தபின்பு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் . அதிலும் சில  நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

Tags : Tiruvennainallur , Thiruvenneynallur, Regulatory Sales Hall, Wastage Paddy Bags,
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்