×

தொலைதூர கல்வி விவகாரம் வெளிமாநிலங்களில் நடத்த கூடாது : யுஜிசி உத்தரவு செல்லும் என ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தொலைதூர கல்வியை வெளி மாநிலங்களில் நடத்த கூடாது என்ற பல்கலைக்கழக மானிய குழுவின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைத்தூர கல்வியை வெளிமாநிலங்களில் நடத்த கூடாது என்று பல்கலைக் கழக மானிய குழு உத்தரவிட்டது. இந்த உத்தரவை  எதிர்த்து அண்ணாமலை பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பல்கலைக்கழக மானிய குழு உத்தரவுக்கு தடை விதித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழக மானிய குழு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம், குமரேஸ் பாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது பல்கலைக்கழக மானிய குழு தரப்பில் மூத்த வக்கீல் ஜி.ராஜகோபால் ஆஜராகி, கடந்த 2017ம் ஆண்டு புதிய விதியை பல்கலைக்கழக மானிய குழு ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அந்தந்த மாநிலங்களில்தான் தொலை தூர கல்வியை நடத்த வேண்டும்.

வெளிமாநிலத்தில் நடத்த கூடாது என்றார்.  இதற்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஐசக் மோகன்லால், பழைய விதியில் அப்படி இல்லை. இருந்தாலும் ஏற்கனவே படித்து முடித்தவர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய விதி செல்லும். அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் தமிழகத்தில் மட்டும் தான் தொலை தூர கல்வியை நடத்த வேண்டும். தொலைதூர கல்வி மூலம் ஏற்கனவே படித்தவர்களின் பட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர்.

Tags : ICourt ,UGC , Distance Education Matters, UGC Order, high Court Order
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு