சினிமாவில் நடிக்க ‘சான்ஸ்’ தருவதாக கூறி இளம்பெண்கள், சிறுமிகளிடம் பல கோடி ரூபாய் மோசடி: பாலிவுட் நடிகர் கைது

திருமலை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்கள், சிறுமிகளிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த பாலிவுட் நடிகரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்தவர் அர்மான்அர்ஜுன்கபூர். இவர் பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சில மாதங்களுக்கு முன்பு குடியேறினார். அங்குள்ள சைப்ராபாத் பகுதியில் ‘காஸ்மோபாலிட்டன் மாடல்ஸ்’ என்ற பெயரில் ஏஜென்சி தொடங்கி குழந்தைகளுக்கான மாடலிங் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

அப்போது இவரிடம் மதினாகுடா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அறிமுகமானார். அந்த சிறுமி தனது மாடலிங் ஆசை குறித்து தனது பெற்றோருடன் வந்து அர்மான் அர்ஜுன்கபூரிடம் கூறினார்.

அதற்கு அவர், ‘பிரபல தெலுங்கு பட ஹீரோயினுடன் இணைந்து விளம்பர காட்சியில் நடிக்க வாய்ப்பு தருகிறேன். ஆனால் இதற்காக சில லட்சங்கள் செலவாகும்’ என கூறினார். இருப்பினும் மகளின் ஆசைக்காக அவரது பெற்றோர் பணம் கொடுக்க முன்வந்தனர். இதை பயன்படுத்தி அர்மான் அர்ஜுன் கபூர், அந்த சிறுமியின் பெற்றோரிடம் மேக்கப், காஸ்ட்யூம், ஷூட்டிங் என மொத்தம் ₹14 லட்சம் வரை பெற்றுள்ளார். இருப்பினும் ஒருநாள் கூட ஷூட்டிங் நடத்த ஏற்பாடு செய்யவில்லை என தெரிகிறது.

இதனை சிறுமியின் பெற்றோரை கேட்டுள்ளனர். ஆனால் நடிகர் அர்மான், சரிவர பதில் கூறாமல் தட்டிக்கழித்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சைப்ராபாத் போலீசில் புகார் செய்தனர். அர்மானிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் பல இளம்பெண்கள், சிறுமிகளிடம் சினிமா மற்றும் மாடலிங் ஆசைக்காட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹15.60 லட்சம் ரொக்கம், 4 ஆப்பிள் போன்கள், 1 லேப்டாப், 3 சிம்கார்டுகள், 2 ஆதார் கார்டுகள் மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே அர்மானிடம் மேலும் பல சிறுமிகள் மற்றும் பெண்கள் என பலர் கோடிக் கணக்கில் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. தாங்கள் ஏமாற்றப் பட்டதால் அவர்களும் போலீசில் புகார் கொடுக்க முன் வந்துள்ளனர். நடிகர் அர்மானால் பலர் பணத்தை இழந்தது தெரியவந்துள்ளதால் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

Related Stories: