பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் அறுவடை பணி தீவிரம் மயிலம்பாடியில் நெல் கொள்முதல் நிலையம் இன்று திறக்கப்படுகிறது

பவானி : பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். இதையடுத்து மயிலம்பாடியில் இன்று நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படுகிறது.  மேட்டூர் மேற்குக்கரை பாசனப் பகுதியில் அதிகளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம்.

இதற்காக, பூதப்பாடி மற்றும் மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். வாய்க்கால் பாசனத்துக்கு கடந்த 15-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால், பரவலாக அறுவடைப் பணிகளை விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்யும் வகையில் பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் கடந்த வாரம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இங்கு, சன்ன ரக நெல்லுக்கு ஊக்கத் தொகை சேர்த்து கிலோ ரூ.21.60-க்கும், பொதுரக நெல் கிலோவுக்கு ரூ.21.15-க்கும் கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது.

வழக்கமாக இரு மையங்களும் ஒரே நாளில் திறக்கப்படும் நிலையில், பவானிக்கான நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொட்டி வைக்க இடமின்றியும், கொள்முதல் நிலையம் திறந்த பின்னர் அறுவடைப் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் விவசாயிகள் தவித்தனர்.

இந்நிலையில், விவசாயிகளின் தோட்டங்களுக்கே செல்லும் வியாபாரிகள் நெல்லை அரசு வழங்கும் விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். இதனால், விவசாயிகள் வருவாய் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. எனவே, பவானி மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் பயனடையும் வகையில் மயிலம்பாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

இதற்கிடையே மயிலம்பாடியில் இன்று முதல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து பவானி நுகர்பொருள் வாணிப கழக கொள்முதல் அதிகாரி மோகனசுந்தரம் கூறியதாவது: தற்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளது. மயிலம்பாடியில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன.

 நெல் கொள்முதல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. சாக்கு, எடை இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தயாராக உள்ளன. நாளை (இன்று) முதல் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட துவங்கும். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நெல் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள், பட்டா,சிட்டா, அடங்கள், விஏஓ சான்று, ஆதார் அட்டை, வங்கி புத்தகத்தின் நகல் மற்றும் இரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும். தினமும் 40 கிலோ மூட்டைகளில் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு மோகனசுந்தரம் கூறினார்.

Related Stories: