×

வேலூர் ஜிபிஎச் மருத்துவமனையில் ₹198 கோடியில் அமையும் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்காக பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கியது

*புதிய கட்டிடத்திற்கு விரைவில் டெண்டர்

வேலூர் : வேலூர் ஜிபிஎச் மருத்துவமனையில் ₹198 கோடியில் அமையும் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்காக பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கியது. விரைவில் புதிய கட்டிடத்திற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும் என பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுடன் இணைந்த சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கான சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்காக கணியம்பாடி அடுத்த நெல்வாய் கிராமத்தில் முதலில் இடம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அது கைவிடப்பட்டது.

இதையடுத்து வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனை வளாகத்தில் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏற்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஜி-7 என்ற அடிப்படையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்காக ₹198 கோடியை அரசு ஒதுக்கியது.

தொடர்ந்து இங்கு மண் பரிசோதனை உட்பட அனைத்து பரிசோதனைகளும் முடிந்து கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை அடைந்தன.
இதற்காக ஜிபிஎச் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவை ஒட்டியுள்ள பழைய கட்டிடங்கள், பழைய ஆண் மற்றும் பெண் உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம், சிறப்பு வார்டு கட்டிடம், தீப்புண் வார்டு, குழந்தைகள் நலப்பிரிவு வார்டு, பழைய டிஎம்ஓ அலுவலகம் ஆகிய கட்டிடங்கள் இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி மருத்துவக்கல்வி இயக்குனர் சாந்திமலர், பழைய கட்டிடங்கள் இடிப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தற்போது, வேலூர் பென்ட்லண்ட் மருத்துவமனை வளாகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணிதுறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் பென்ட்லண்ட் மருத்துவமனை வளாகத்தில் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்ததும், புதிய கட்டிடத்தின் மாதிரி வரைபடம் வைத்து கட்டிடத்தின் அமையவிடம் தேர்வு செய்யப்படும்.

அதன்பின்னர், மருத்துவமனை வளாகத்தில் மரங்களை அகற்றுவதற்கு ஆர்டிஓவிடம் அனுமதி பெற்று, மரங்கள் முழுவதும் அகற்றுவதாக அல்லது மரங்களின் கிளைகள் அகற்றுவது முடிவு செய்யப்படும். அதன்பின்னரே புதிய கட்டிடத்திற்கான டெண்டர் விடப்பட்டு, பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாத முதல் வாரத்தில் கட்டுமான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

சித்த மருத்துவமனையை இடம் மாற்ற முடிவு

வேலூர் அரசு பென்ட்லண்ட் மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவமனை கட்டிடம் உள்ளது. தற்போது, சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடம் வளாகம் ஒரே நேர்கோட்டில் அமைப்பதற்காக சித்த மருத்துவமனையை அருகிலேயே இடம் மாற்ற மருத்துவக்கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. எம்எஸ்1, எம்எஸ்2 கட்டிடத்திற்கு சித்த மருத்துவம் மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் காசநோய் பிரிவுக்கு தனியாக சுற்றுச்சுவர் அமைத்து தனியாக பாதை அமைக்கப்பட உள்ளது.


Tags : Vellore GPH Hospital ,Super Multi Speciality Hospital , Vellore: Old buildings to be demolished for ₹198 crore Super Multi Specialty Hospital at Vellore GBH Hospital
× RELATED சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி...