×

சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமான பணி விரைவில் துவக்கம்அதிகாரிகள் தகவல்வேலூரில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவுடன்

வேலூர், ஏப்.19: வேலூர் ஜிபிஎச் மருத்துவமனை வளாகத்தில் அரசு வேலூர் மருத்துவக்கல்லூரியுடன் இணைந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதியும் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுடன் இணைந்த சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றிய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கான சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்காக கணியம்பாடி அடுத்த நெல்வாய் கிராமத்தில் முதலில் இடம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அது கைவிடப்பட்டது.

தொடர்ந்து வேலூர் ஜிபிஎச் மருத்துவமனை வளாகத்தில் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏற்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஜி-7 என்ற அடிப்படையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்காக ₹198 கோடியை அரசு ஒதுக்கியது. தொடர்ந்து இங்கு மண் பரிசோதனை உட்பட அனைத்து பரிசோதனைகளும் முடிந்து கட்டுமான பணிகள் தொடங்குவதற்காக ஜிபிஎச் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவை ஒட்டியுள்ள பழைய கட்டிடங்கள், பழைய ஆண் மற்றும் பெண் உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம், சிறப்பு வார்டு கட்டிடம், தீப்புண் வார்டு, குழந்தைகள் நலப்பிரிவு வார்டு, பழைய டிஎம்ஓ அலுவலகம் ஆகிய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

இதற்கிடையில், சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கூடுதலாக இடம் தேவைப்படுவதாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் தெரிவித்தது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் மருத்துவக்கல்வி இயக்குனர் சாந்திமலர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஜிபிஎச் மருத்துவமனை வளாகத்தில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டார். அதன் முடிவில் தேவைக்கேற்ப அங்குள்ள பிற பழைய கட்டிடங்களையும் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய தொல்லியல்துறை, புராதன சின்னங்களை மறைக்கும் வகையில் 300 மீட்டர் தொலைவுக்குள் எவ்வித உயரமான புதிய கட்டிடங்களை கட்டக்கூடாது என்ற விதிமுறைகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தது.

இதைதொடர்ந்து தொல்லியல்துறை அலுவலர்கள், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் மற்றும் அலுவலர்கள் கடந்த மாதம் ஜிபிஎச் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து ஏற்கனவே இங்கு மருத்துவமனை செயல்பட்டு வந்தது, பொதுமக்களின் நலன் என பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டி மாநில அரசு பல்நோக்கு மருத்துவமனை அவசியத்தை வலியுறுத்தி தொல்லியல்துறையை அணுகியது. இதன் பலனாக தொல்லியல்துறையின் தடைக்கல் அகன்றுள்ளதாகவும், ஒரு மாதத்தில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால், தற்போது வேலூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதியை ஏற்படுத்த மருத்துவக்கல்வி இயக்குனரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மருத்துவக்கல்வி இயக்குனரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இடவசதி இல்லை. அதனால் வேலூர் ஜிபிஎச் வளாகத்தில் அமைய உள்ள சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையிலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவும் வந்துவிடும்’ என்றனர்.

The post சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமான பணி விரைவில் துவக்கம்
அதிகாரிகள் தகவல்
வேலூரில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவுடன்
appeared first on Dinakaran.

Tags : Vellore ,Super Specialty Hospital ,Government Vellore Medical College ,Vellore GPH Hospital ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...