‘அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை’. இந்த பழமொழி அப்படியே அதிமுகவுக்கு பொருந்தும். கட்சி தொடங்கி பொன்விழா முடிந்த வரலாறு கொண்ட அதிமுக, தனி நபர்களின் அதிகார ஆசைக்கும், பல வழக்குகளுக்கு பயந்தும் பாஜவிடம் மண்டியிட்டு கொண்டு இருக்கிறது. ஜெயலலிதா இருக்கும் வரை இருக்கிற இடம் தெரியாமல் இருந்த பாஜ, அவரது மறைவுக்கு பிறகு வீசிய தூண்டிலில் சிக்கிய மண் புழு போல அதிமுக எழ முடியாமல் விழுந்து கிடக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகார சண்டையால், கட்சியை கைப்பற்றுவதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால், தனக்கென்று ஒரு பலமான அணியை உருவாக்க திட்டமிட்ட இபிஎஸ், கொங்கு மண்டலம் மற்றும் அவருடைய சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து கட்சியை கைப்பற்ற முயன்றார். கடந்தாண்டு ஜூலை மாதம் பொதுக்குழுவை கூட்டி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* பாஜவின் பலே திட்டம்
‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். அதிமுகவில் ஏற்பட்ட கோஷ்டி பூசலால் பாஜவுக்குதான் கொண்டாட்டம். தமிழ்நாட்டில் கால் பதிக்க பாஜவுக்கு அரசியல் ஏணியாக இருந்தது அதிமுகதான். ஆனால், இன்று அந்த அதிமுகவை ‘பிளாக் மெயில்’ செய்து அரசியல் செய்து வருகிறது பாஜ. தமிழ்நாட்டில் பாஜ குறிப்பிட்ட இடத்தை பிடித்துவிட்டது என்று சொன்னாலும், ‘மக்கள் தீர்ப்பே ; மகேசன் தீர்ப்பு’ என்று சொல்லக்கூடிய ஜனநாயக தேர்தலில் பாஜவை மக்கள் அங்கீகரிக்கவில்லை. பல இடங்களில் நோட்டாவிடம் தோல்வியடைந்துள்ளனர். இதனால், அதிமுகவின் தயவை நம்பி பாஜ உள்ளது. அதே நேரத்தில், பாஜவின் சூழ்ச்சியை உணர்ந்த இபிஎஸ், தனித்து போட்டியிட முடிவு செய்தார். உடனே பாஜ தலைவர்கள், ஓபிஎஸ்சுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி இபிஎஸ்சுக்கு எதிராக வலுவான அரசியல் செய்ய ‘அசைன்மென்ட்’ கொடுத்தனர். சில பொம்மைகள் ‘கீ’ கொடுத்தால் ஓடுவதுபோல், பாஜவின் கீக்கு ஓபிஎஸ் அணி பிரமாதமாகவே ‘பர்பார்மென்ஸ்’ செய்து வருகிறது.
* ‘பல்ஸ்’-ஐ சோதிக்க...
இந்த நேரத்தில்தான், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணமடைந்தார். இந்த தொகுதிக்கு பிப்.27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை, நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு டிரையலாக பார்க்கிறது பாஜ. இங்கு ஓபிஎஸ், இபிஎஸ் அணி இருவரும் வேட்பாளர்களை நிறுவத்துவதாக அறிவித்து உள்ளன. இந்த தேர்தல் மூலம் இரட்டை இலையா? இரட்டை தலைமையா? என்று அதிமுக தலைவர்களின் ‘பல்ஸ்’-ஐ சோதிக்க உள்ளது பாஜ. தற்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்தான் என்பதை தேர்தல் ஆணையம் ஏற்று வருகிறது. இருவரும் கூட்டாக கையெழுத்திட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இது, எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக அண்ணாமலைக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்று தருமாறு எடப்பாடி தூது அனுப்பி உள்ளார். இதைத்தான் பாஜ எதிர்பார்த்தது. நினைத்தபடியே இபிஎஸ் தேடி வந்துவிட்டார். ஓபிஎஸ்சும் இரட்டை இலை சின்னத்தை பெற்று தருமாறு டெல்லி தலைவர்கள் மூலம் காய் நகர்த்தி வருகிறார் .
* டிரம்ப் கார்டு
இடைத்தேர்தல் ரேசில் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருந்தாலும், அதிமுக இரு அணிகளுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தி கடைசி வரை இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு டென்ஷனை ஏற்படுத்த பாஜ விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரு அணிகள் போட்டியிட்டால், சுயேச்சை சின்னங்கள்தான் வழங்கப்படும். இது, அதிமுகவின் ஓட்டு வங்கியை மேலும் குறைக்கும். தனது செல்வாக்கை நிரூபிக்க முடியாமல் தவித்து வரும் பாஜ மேலிடம், அதிமுகவின் உட்கட்சி பூசலை ‘டிரம்ப் கார்டு’ ஆக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் பெற நினைக்கிறது.
* இபிஎஸ் சரண்டரா?
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டால் அக்கட்சி தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதை தனக்கு சாதகமாக்கி கூட்டணி என்ற அடிப்படையில் பாஜவுக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கும் வகையில் சூழலை உருவாக்குவதுதான் பாஜவின் திட்டமாக உள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி தனது நிலையை மாற்றிக்கொண்டு பாஜவிடமிருந்து மெல்லமெல்ல விலகத் தொடங்கிவிட்டார். ஆனால் ஓ. பன்னீர்செல்வம் எப்போதும்போல ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். எனவே எடப்பாடி பழனிசாமியை தங்களது வழிக்கு கொண்டு வர வேண்டும் எனில், இரட்டை இலை விவகாரத்தை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் அவர் வேறு வழியின்றி இறங்கி வந்து ஆதரவு தெரிவிப்பார் என்று பாஜ உறுதியாக நம்புகிறது.
* அதிமுகவுக்கு வந்த சோதனை
கூட்டணியில் இல்லாதபோது, கலைஞர் மற்றும் ஜெயலலிதாவை வீடு தேடி சென்று பார்த்தார் பிரதமர் மோடி. தேடி வந்த ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலை காக்க வைத்தவர் ஜெயலலிதா. அப்படி இருந்த அதிமுகவுக்கு இன்று மிகப்பெரிய சோதனை வந்து உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கூட்டணி வைத்த பாஜ, அதன்பிறகு நடந்த தேர்தல் சீட் ஒதுக்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தனியார் ஓட்டலில்தான் நடந்தது. அதுவும், முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஓட்டலுக்கு சென்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். இதை கூட ஏற்றுக்கொண்ட தொண்டர்கள், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ஆதரவு கேட்டு, ஜி.கே.வாசன், அண்ணாமலை, ஜான்பாண்டியன், ஜெகன் மூர்த்தியுடன் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணியினர் தனித்தனியாக சந்தித்து பேசினர். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் முன்னாள் முதல்வர்கள். அரசியலுக்கு இப்போது வந்த அண்ணாமலையின் ஆதரவு கேட்டு கெஞ்சுவதால், தொண்டர்கள் கொதிப்படைந்து உள்ளனர்.
சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்தது ஞாபகம் இருக்கா...
* இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட பிறகு, அதை மீட்க இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுப்பதாக பேரம் பேசப்பட்டு, டெல்லியில் உள்ள தனியார் ஓட்டலில் டிடிவி.தினகரன் சார்பில் பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
* இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்த டெல்லி போலீசார், அவரிடம் இருந்து ரூ.1.3 கோடி ரொக்கத்தை கைப்பற்றினர். இதுதொடர்பாக டிடிவி.தினரகன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா கைது செய்யப்பட்டனர். பின்னர், ஜாமீனில் வெளி வந்தனர். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
* பயப்படும் அண்ணாமலை
பாஜவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், ஆபாச ஆடியோ மற்றும் வீடியோக்களை வைத்து முக்கிய தலைவர்களை மாநில தலைவர் அண்ணாமலை மிரட்டுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சமீபத்தில் நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன். நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தமிழ்நாட்டின் மகள், நீங்க தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், பாஜ சார்பில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இப்போது மீண்டும் போட்டியிட்டு டெபாசிட் இழந்தால், கட்சித் தலைவர் பதவி மற்றும் இமேஜ் போய்விடும் என்பதால் அவர் பயப்படுவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் பாஜ, இந்த தேர்தலில் தோல்வியடைந்தால் பாதிப்பு ஏற்படும் என நினைத்து, இந்த தேர்தலில் அதிமுவுக்கு ஆதரவு தர டெல்லி மேலிடம் மாநில பாஜவுக்கு உத்தரவிட்டுள்ளது.
* 200 அறைகள் புக்கிங்
ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தால், இருக்கிற மதிப்பும் போய்விடும் என்பதால், இந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று டெல்லி தலைமை மாநில பாஜவுக்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அபார்ட்மெண்ட், தங்கும் விடுதிகள் என 200 அறைகள் வரை பாஜவினர் புக்கிங் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
* பாஜ போட்டியா?
பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை ஓபிஎஸ் சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘இரட்டை இலை சின்னத்தை முடக்க நான் காரணமாக இருக்க மாட்டேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜ போட்டியிட்டால் ஆதரிக்க தயார். அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை’ என்று தெரிவித்தார். எடப்பாடி அணிக்கு போட்டியாக இடைத்தேர்தலில் போட்டியிடபோவதாக அறிவித்துவிட்டு வேட்பாளர் தேர்விலும் மும்முரம் காட்டி வரும் ஓபிஎஸ், பாஜவுக்கும் ஆதரவு தர தயார் என பேசி உள்ளது பல்வேறு சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
வரலாறு திரும்புகிறது
* அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, கடந்த 1989ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, எம்ஜிஆரின் மனைவி ஜானகி ஒரு அணியாகவும், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியாகவும் களம் கண்டனர்.
* இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியதால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனால், ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டை புறா சின்னத்திலும் போட்டியிட்டது.
* தேர்தலுக்குப் பின்னர் ஜானகி அணி தோற்றதால் ஜெயலலிதா அணியே உண்மையான அதிமுக என்றானது. ஜானகி அம்மாள் அரசியலுக்கு முழுக்குப் போட அதிமுக சின்னம், தலைமை அலுவலகம், கட்சி அத்தனையும் ஜெயலலிதாவின் வசமானது.
* ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ் முதல்வராக பதவியேற்றார். சில நாட்களில் சசிகலா ராஜினாமா செய்ய சொன்னதாக கூறப்படுகிறது. இதனால், பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ், ஜெயலலிதா மறைவுக்கு நீதி கேட்டு சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கினார்.
* சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றபோது, கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு மற்றும் தலைமை பொறுப்பை டிடிவி.தினகரனிடம் ஒப்படைத்து சென்றார்.
* இந்த தேர்தலின்போது அதிமுக அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வீட்டில், ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.89 கோடி பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களை வருமானவரித்துறை கைப்பற்றியதால், இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், இரு மனங்களும் (ஓபிஎஸ், இபிஎஸ்) ஒன்று சேர்ந்ததால் இரட்டை இலை சின்னம் மீண்டும் கொடுக்கப்பட்டது.
* இரு அணிகளும் அதிமுக மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரினர். இதனால், இரட்டை இலை சின்னத்தை முடக்கி, அதிமுக பெயரையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டது.
* இவர்கள் அனைவரும் டிடிவி.தினகரனுக்கு எதிராக செயல்பட்டதால், அவர் அமமுக என்ற கட்சியை தொடங்கினார். தற்போது, இபிஎஸ், ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்க தயாராகி வருவதால், 3வது முறையாக இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
* முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். இந்த நேரத்தில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு 2017ம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, அதிமுக சார்பில் டிடிவி.தினகரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
