×

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது யார்? குழப்பத்தில் எதிர்க்கட்சிகள்; எடப்பாடியா, ஓபிஎஸ்சா என முடிவெடுக்க முடியாமல் திணறும் பாரதிய ஜனதா

சென்னை: திமுக கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளில் கடுமையான குழப்பம் நிலவி வருவதால், தேர்தலில் போட்டியிடுவதா அல்லது வேண்டாமா, வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற முடிவை எடுக்க முடியாமல் தலைவர்கள் திணறி வருகின்றனர். இது தமிழக அரசியலில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வருகிற 31ம் தேதி, வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணியினரும் வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்துள்ளனர். இவர்களில் எந்த தரப்புக்கு, பாஜ ஆதரவு அளிக்கும் என்ற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி ஒரு வேட்பாளரையும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்டையில் ஓ.பன்னீர்செல்வம் ஒரு வேட்பாளரையும் நிறுத்தும் பட்சத்தில், இருவரும் இரட்டை இலை சின்னத்தை கேட்டு தேர்தல் நடத்தும் அதிகாரியை அணுகினால், இரட்டை இலை சின்னம் பெரும்பாலும் முடங்கும் என்றே தெரிகிறது.

இதனால் இருவரும் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. அதேநேரம், அதிமுகவின் முடிவு பாஜ கையில் இருப்பதால் என்ன மாதிரியான முடிவை எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அதிமுக இரு அணிகளாக போட்டியிடும் சூழ்நிலைதான் உள்ளது. அதிமுகவின் இரண்டு அணியினரும், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை கமலாலயத்துக்கு நேரில் சென்று ஆதரவு கேட்டுள்ளனர். அதேபோன்று, அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சி தலைவர்களையும், அவர்களது வீட்டுக்கே சென்று இரு அணியினரும் ஆதரவு கேட்டனர்.

இதுவரை சிறிய கட்சிகளின் தலைவர்கள்தான், பெரிய கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்பார்கள். ஆனால், நிர்வாகிகள் இல்லாத கட்சிகளின் தலைவர்களைக் கூட அதிமுக இரு அணியினரும் சந்தித்து ஆதரவு கேட்கும்நிலை தற்போது உருவாகியுள்ளது. அதே நேரம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், பாஜ வேட்பாளரை நிறுத்தலாம் என்ற ஒரு எண்ணமும் அண்ணாமலைக்கு உள்ளது. ஆனாலும், இதில் இறுதி முடிவு எடுக்க முடியாமல் பாஜ தலைவர்கள் திணறி வருகிறார்கள். டெல்லி மேலிடமோ, யாருக்கு ஆதரவு என்று அறிவிப்பதில் அவசரப்பட வேண்டாம்.

அதேநேரத்தில், போட்டியிடவும் வேண்டாம் என்று கூறிவிட்டது. இந்தநிலையில், நேற்று திருச்சியில் பேட்டி அளித்த, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூட, பாஜ போட்டியிடவில்லை என்று உறுதியாக கூறவில்லை. அதிமுக பெரிய கட்சி, அதனால் வெற்றி தோல்வி அறிந்து நாங்கள் முடிவு செய்வோம் என்றுதான் கூறியுள்ளார். இதனால், பாஜ போட்டியிடாது என்று உறுதியாக கூற முடியாத நிலையே தற்போதும் உள்ளது. அதேநேரத்தில், அதிமுக ஆதரவு கேட்ட புதிய நீதிக்கட்சி, தமிழக முன்னேற்ற கட்சி ஆகியவை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க மறுத்து விட்டது.

பாஜ போட்டியிடாத சூழ்நிலையில் அவர்களுக்கு ஆதரவு என்று அறிவித்து விட்டன. இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், நாம் தமிழர், அமமுக ஆகிய கட்சிகளும் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் குழப்பம் அடைந்துள்ளன. மேலும், அதிமுக சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் முத்துசாமியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை வேட்பாளராக நிறுத்த எடப்பாடி முடிவு செய்திருந்தார்.

இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தினார். முதலில் போட்டியிடத் தயார் என்று கூறியிருந்தவர், ஓ.பன்னீர்செல்வம் அணி போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், தான் போட்டியிட விருப்பம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமியிடம் கூறிவிட்டார். இது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த தென்னரசு அல்லது முன்னாள் துணை மேயர் ஆகியோரில் ஒருவரை நிறுத்தலாமா என்று ஆலோசனை நடத்தி வருகிறார். ஆனால், யார் போட்டியிட்டாலும் டெபாசிட் காலியாகிவிடும். இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் வேட்பாளர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

விருப்ப மனு கேட்கிறார்: நன்கு அறிமுகம் உள்ள பிரமுகர்கள் போட்டியிட மறுத்த நிலையில், போட்டியிட விரும்பும் அதிமுகவினர் (எடப்பாடி அணி) ரூ.15 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனு வாங்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (நேற்று) முதல் வரும் 26ம் தேதி (வியாழன்) வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்.

இதற்கான விண்ணப்ப கட்டண தொகையாக 15,000 ரூபாயை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்ப படிவங்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அதிமுக சார்பில் நேற்று (23ம் தேதி) முதல் விருப்ப மனு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டாலும், முதல் நாளான நேற்று ஒன்று, இரண்டு பேர் மட்டுமே விருப்ப மனு பெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் தெளிவான பதில் கூற மறுத்து விட்டனர். அதன்படி பார்த்தால், விருப்ப மனு வாங்க பெரிய அளவில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றே கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘பொதுத்தேர்தல் அல்லது 4, 5 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் என்றால் விருப்ப மனு பெறலாம். ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தலுக்குமா விருப்ப மனு பெற வேண்டும்’ என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

* நிர்வாகிகள் இல்லாத கட்சிகளின் தலைவர்களைக் கூட அதிமுக இரு அணியினரும் சந்தித்து ஆதரவு கேட்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
* அதிமுகவுக்கு சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், பாஜ வேட்பாளரை நிறுத்தலாம் என்ற ஒரு எண்ணமும் அண்ணாமலைக்கு உள்ளது. ஆனாலும், இதில் இறுதி  முடிவு எடுக்க முடியாமல் பாஜ தலைவர்கள் திணறி வருகிறார்கள். டெல்லி  மேலிடமோ, யாருக்கு ஆதரவு என்று அறிவிப்பதில் அவசரப்பட வேண்டாம். அதேநேரத்தில், போட்டியிடவும் வேண்டாம் என்று கூறிவிட்டது.

Tags : Erode ,East ,Constituency ,Edapadia ,Opissa , Who is contesting from Erode East constituency? Opposition parties in confusion; Bharatiya Janata Party is unable to decide on Edappadia and OPSA
× RELATED ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தளவு வாக்குப்பதிவு