×

ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தளவு வாக்குப்பதிவு

 

ஈரோடு,ஏப்.21: ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு கிழக்கு, மேற்கு ஆகிய சட்டமன்ற பகுதியில் வழக்கம் போல குறைந்த அளவு வாக்குபதிவு நடந்துள்ளது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம், குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன.இதில் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகள் மற்ற தொகுதிகளை காட்டிலும் கடந்த தேர்தல்களில் குறைந்த அளவே வாக்குப்பதிவு நடைபெறுவது வழக்கம்.

இதையடுத்து நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் மற்ற சட்டமன்ற தொகுதிகளுக்கு இணையாக உயர்த்த வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்த வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது தற்போதைய வாக்குபதிவு நிலவரத்தில் தெரியவந்துள்ளது.

இந்த தேர்தலில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் உள்ள குமாரபாளையம், மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம் ஆகிய சட்டன்ற தொகுதிகளில் 70 சதவீத வாக்குப்பதிவு கடந்துவிட்ட நிலையில், ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதியில் மட்டும் 70 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவாகி உள்ளது. ஈரோடு கிழக்கு 66.05 சதவீதமும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 65.73 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியானது 3.17 சதவீதம் குறைந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 1.33 சதவீதம் குறைந்துள்ளது.

The post ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தளவு வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Erode East ,West ,Erode ,Erode Parliamentary ,Erode West ,Modakurichi ,Gangeyam ,Tarapuram ,Kumarapalayam 6 ,Parliamentary Constituency ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...