×

பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வெனிலா சாறு தயாரிக்கலாம் : எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!!

டெல்லி : உலகம் முழுக்க பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுசுழலுக்கு ஏற்படும் மாசு அபாயகரமானதாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் 1 நிமிடத்திற்கு சுமார் 10 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் அதில் 14% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் மீதி பொருட்கள் பிளாஸ்டிக் கழிவுகளாக கொட்டப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுசூழல் திட்ட குழு தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை அதிகளவில் மறுசுழற்சி செய்யவும் பிளாஸ்டிக்கை மக்கிப்போக செய்யும் தொழில்நுட்பத்தை கண்டறியவும் உலக விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த எடின்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிர் தொழில்நுட்பவியல் விஞ்ஞானிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பாக்டீரியா மூலம் பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளை கொண்டு வெனிலா சாறு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.அவர்கள் வெளியிட்டு இருக்கும் ஆய்வு கட்டுரையில் தங்கள் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட இ – கோலி பாக்டீரியாவானது பிளாஸ்டிக் பாட்டில்களில் காணப்படும் முக்கிய வேதிப் பொருட்களான தெரப்தாலிக் அமில மூலக்கூறில் சிறிய மாற்றம் செய்து அதனை வெனிலின் எனப்படும் வேதிப் பொருட்களாக மாற்றும் திறன் உடையது என்று கூறி உள்ளனர். அந்த வகை மரபணு மாற்றம் செய்யப்பட்ட பாக்டீரியாக்களின் உதவியுடன் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் இருக்கும் 79% தெரப்தாலிக் அமிலத்தை, வெனிலினாக மாற்ற முடியும் என்று அவர் கண்டறிந்துள்ளனர். வெனிலின் வேதிப் பொருளானது வெனிலா எஸ்ட்ராக்ட் எனப்படும் வெனிலா சாறு தயாரிக்க பயன்படும் முக்கிய வேதிப் பொருள் ஆகும். இந்த வெனிலா சாறு கேக், ஐஸ்க்ரீம், அழகு சாதனங்கள், மருந்துகள் மற்றும் பல வாசனை திரவியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுநாள் வரை இந்த வெனிலா சாறு வெனிலா பீன்ஸ் எனப்படும் தாவரத்தில் இருந்துதான் தயாரிக்கப்பட்டு வருகிறது.விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கும் இந்த புதிய தொழில்நுட்பம் மூலமாக இனி அன்றாட பயன்படுத்தப்பட்டு தூக்கி எரியும் பாட்டில்களில் இருந்து அதிகளவில் வெனிலா சாறு தயாரிக்கலாம் எனவும் அதன்மூலமாக எதிர்காலத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதை பெருமளவு குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்….

The post பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வெனிலா சாறு தயாரிக்கலாம் : எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!! appeared first on Dinakaran.

Tags : University of Edinburgh ,Delhi ,Dinakaran ,
× RELATED உலகில் 8ல் ஒரு குழந்தை ஆன்லைன் மூலமாக...