திருவொற்றியூரில் பரபரப்பு; கடல் அலையில் சிக்கி போராடிய 3 காதல் ஜோடி பத்திரமாக மீட்பு: மீன்பிடி வலைகளை வீசி மீனவர்கள் காப்பாற்றினர்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் கடலில் குளித்தபோது இழுத்துச் செல்லப்பட்ட 3 காதல் ஜோடிகளை வலைகளை வீசி மீனவர்கள் மீட்டனர். சென்னை திருவொற்றியூர், எண்ணூர் கடல் பகுதி ஆழமாகவும் கூர்மையான கருங்கற்கள் நிறைந்து காணப்படுவதால் இந்த பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை பொருட்படுத்தாத இளைஞர்களும் சிறுவர்களும் கடலில் இறங்கி குளிக்கின்றனர். இவ்வாறு குளிக்கும்போது ஆழமான பகுதி, கற்கள் இடையே சிக்கி பலபேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய 3 காதல் ஜோடிகள் பத்திரமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி விவரம் வருமாறு; நேற்று விடுமுறை என்பதால் ஏராளமான பொதுமக்கள், திருவொற்றியூர், கேவிகே. குப்பம் கடல் பகுதிக்கு வந்திருந்தனர். பின்னர் இதில் பெரும்பாலானவர்கள் கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் 3 காதல் ஜோடிகள் சேர்ந்து கடல் அலையில் விளையாடியபடி குளித்துள்ளனர். திடீரென ஆர்ப்பரித்துவந்த ராட்சத அலையில் சிக்கிய 3 காதல் ஜோடிகளும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு ஆறு பேரும் தத்தளித்துள்ளனர். இதை பார்த்ததும் கடற்கரையில் இருந்தவர்கள் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டுள்ளனர்.

சத்தம் கேட்டு கடல் மணலில் அமர்ந்து வலை பின்னிக் கொண்டிருந்த மீனவர்கள் ஓடி வந்து மீன்பிடி வலைகளை கடலுக்குள் வீசி 6 பேரையும் பத்திரமாக காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்தனர். இதுபற்றி விசாரித்தபோது, பெற்றோருக்கு தெரியாமல் கடற்கரையில் அமர்ந்து பேசுவதற்காக வந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு பொதுமக்களும் மீனவர்களும் அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: