சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஓ.பி.எஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாமக அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா தலைமையில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? அல்லது புறக்கணிக்கலாமா? மேலும் எந்த கட்சிக்காவது ஆதரவு அளிக்கலாமா? என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் இடைத்தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். அதே நேரத்தில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம்? என்று பெரும்பாலான நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இடைத்தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மக்களின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்கின்ற நெய்வேலி அனல் மின் நிலையம் மற்றும் சேலம் இரும்பு உருக்காலைகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியை வன்மையாக கண்டிக்கிறோம். பரந்தூர் விமான நிலைய விரிவாக்குதல் மற்றும் திருச்சி, கோவை, சேலம் விமான நிலைய விரிவாக்குதல் பணியினை பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்ட பின்பு அதற்கேற்றவாறு செயல்படுத்த வேண்டும்.