வத்தலக்குண்டு பேரூராட்சி நிர்வாகம் அதிரடி சாலையோரம் குவிந்த 800 டன் குப்பைகள் அகற்றம்

*கண்காணிப்பு கேமரா பொருத்தம்

*இருபுறமும் மரக்கன்றுகள் நட்டனர்

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மயான சாலையில் இருபுறமும் குவிந்திருந்த 800 டன் குப்பகைள் அதிரடியாக அகற்றப்பட்டுள்ளன. இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியதுடன், சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டதை மக்கள் வரவேற்றுள்ளனர்.

வத்தலக்குண்டு சிறப்புநிலை பேரூராட்சியின் மயான சாலையில் உள்ள சுப்பிரமணியர் கோயில் அருகாமையில் சுமார் 1000 அடி நீளத்திற்கு சாலையின் இருபுறமும் மலைபோல குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தது. சில இறைச்சி கடைக்காரர்கள் இங்கு குவிந்திருந்த குப்பைகள் மீது இறைச்சி கழிவுகளை கொட்டினர். இதனால் அப்பகுதியில் உள்ள 500 குடும்பங்கள் கடும் துர்நாற்றத்தால் அவதியடைந்து வந்தனர். சில சமூக விரோதிகள் குப்பைகளில் அடிக்கடி தீ வைத்ததால் புகை மண்டலம் ஏற்பட்டு அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்குள் பரவியது.

இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டிய நிலை உருவானது.இந்த பிரச்னை குறித்து அப்பகுதி மக்கள் வத்தலக்குண்டு பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் மயான சாலை பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் எனது குப்பை எனது பொறுப்பு திட்டத்தின்கீழ் அங்கிருந் 800 டன் குப்பைகளும் 13 நாட்களில் முழுமையாக அகற்றப்பட்டு பேரூராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டது.

பின்னர் மயான சாலை பகுதியில் துர்நாற்றத்தை முற்றிலும் அகற்ற பினாயில் மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. மேலும் அங்கு குப்பை கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.அங்கிருந்த குப்பைகளால் கருப்பான மண் அகற்றப்பட்டு அப்பகுதி முழுவதும் புதிய செம்மண் பரவப்பட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் அப்பகுதியில் யாரும் குப்பை கொட்டாத வண்ணம் பசுமை பூங்காவாக மாற்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக சாலையின் இருபுறங்களிலும் தலா 100 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த குழிகளில் பல்வேறு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது அதில் திமுக ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன், நகர செயலாளர் சின்னதுரை உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர் பேரூராட்சி நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

இதன்படி மலைபோல் குவிந்திருந்த குப்பைகளை அகற்றுவதில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட பேரூராட்சி நிர்வாகத்திற்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் செந்தில்குமார் என்பவர் கூறுகையில், குப்பைகள் மீது கொட்டப்பட்ட கோழி கழிவுகளால் இப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் ஏற்பட்டது. இதனால் எனது குழந்தைகள் காலை உணவைக்கூட பள்ளிக்கு எடுத்துச்சென்று சாப்பிட்டனர்.

அதேபோல் குப்பைகள் அடிக்கடி எரிக்கப்பட்டதால் உருவான புகை அனைவரையும் பெரும் அவதிக்குள்ளாக்கியது. பல நேரங்களில் இந்த வழியாக டூவீலர்களில் செல்வதுகூட பெரும் சிரமமாக இருந்தது. இந்த பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தோம்.

எங்கள் நிலையை உணர்ந்துகொண்ட உள்ளாட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் குப்பைகள் சேராதவாறு அவர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்திருப்பது மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி இருப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது. இதற்கிடையே இப்பகுதி மக்களும் பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ள பணிகளை கருத்தில் கொண்டு இனி இப்பகுதியில் எந்த குப்பைகளையும் கொட்டாமல் இருக்க வேண்டும். இதுபோல் நடந்துகொண்டால் இந்த பகுதி நிச்சயம் பூங்கா போல் காட்சியளிக்கும் என்பதை மறுக்க முடியாது என்றார்.

Related Stories: