×

காட்டுப்பன்றியை அடித்துக் கொன்றது தாளவாடியில் புலி நடமாட்டம்

*விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை அறிவுரை

சத்தியமங்கலம் : தாளவாடி மலைப் பகுதியில் பகலில் விவசாய தோட்ட பகுதியில் புலி நடமாடியதால் மலை கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் காட்டுப்பன்றியை அடித்துக் கொன்றதால் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என். பாளையம், கடம்பூர், தலமலை, விளாமுண்டி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான், செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன.

வனப்பகுதியில் இருந்து புலி சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி அவ்வப்போது விவசாய தோட்டங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் தற்போது தாளவாடி மலைப்பகுதியில் பகல் நேரத்தில் விவசாய தோட்ட பகுதியில் புலி நடமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள பசப்பன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி. இவரது தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். நேற்று முன் தினம் மாலை இவரது வாழை தோட்டத்தில் புலி ஒன்று படுத்து கிடப்பதைக் கண்ட சுப்பிரமணி மற்றும் அக்கம் பக்கத்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆள் நடமாட்டத்தைக் கண்ட புலி வாழைத்தோட்டத்தில் இருந்து எழுந்து வனப்பகுதியை நோக்கி ஓடியது. பகல் நேரத்தில் புலி விவசாய விளை நிலத்தில் நடமாடியதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

நேற்று காலை திகினாரை ரங்கசாமி கோவில் அருகே உடலில் ரத்த காயங்களுடன் ஒரு காட்டுப்பன்றி இறந்து கிடந்தது. அதன் அருகே புலியின் கால் தடம் பதிவாகி இருந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். புலி இரவு நேரத்தில் காட்டுப்பன்றியை அடித்து கொன்று இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து ஜீரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். ஏற்கனவே தாளவாடி மலைப்பகுதியில் கருப்பன் யானை அட்டகாசம் செய்து வரும் நிலையில் தற்போது புலி நடமாட்டத்தால் மலை கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஜீரஹள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஜோரைக்காடு வனப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளது. இந்த நிலையில் ரங்கசாமி கோவில் பகுதியில் உள்ள பள்ளத்தில் ஒரு காட்டுப்பன்றியின் உடல் ரத்த காயங்களுடன் கிடப்பதாக அப்பகுதி விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நாங்கள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது அப்பகுதியில் புலியின் கால் தடம் பதிவாகி இருந்தது. காட்டு பன்றியை புலி வேட்டையாடியது உறுதிப்படுத்தப்பட்டது.

இப்பகுதிக்கு அருகே பசப்பன்தொட்டி பகுதி உள்ளதால் அங்குள்ள வாழைத்தோட்டத்தில் நடமாடியது இதே புலியாக இருக்கலாம். இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். புலிகள் பெரும்பாலும் வனப்பகுதியைவிட்டு வெளியேறுவது குறைவு. இருப்பினும் ஜோரைக்காடு வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.



Tags : Thalawadi , Sathyamangalam: In Thalavadi hill area, a tiger roamed the agricultural plantation during the day and the hill villagers are scared. Further
× RELATED சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை..!!