×

கேரளாவில் ரூ.25 கோடி பம்பர் பரிசு பெற்றவர் லாட்டரி கடையை தொடங்கினார்

திருவனந்தபுரம்,: கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி திருவனந்தபுரத்தில் லாட்டரி விற்பனைக் கடையை தொடங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான அனூப் என்பவருக்கு முதல் பரிசான ரூ.25 கோடி கிடைத்தது. பரிசு விழுந்த சிறிது நேரத்திலேயே இவரது புகைப்படமும், பேட்டியும் பத்திரிகைகளிலும் டிவிக்களிலும் வெளியானது. இதன் பிறகு தான் இவருக்கு தொல்லைகள் தொடங்கின. உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என ஏராளமானோர் பணம் கேட்டு அனூப்புக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர். தமிழ்நாட்டில் இருந்து கூட ஏராளமானோர் இவரது வீட்டுக்கு படையெடுத்தனர்.

இதனால் வேறு வழி இல்லாமல் இவர் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்தார். ஓணம் பம்பர் குலுக்கலுக்குப் பின்னர் பூஜா பம்பர் மற்றும் கிறிஸ்துமஸ் பம்பர் குலுக்கல்கள் நடந்தன. பூஜா பம்பர் முதல் பரிசு ரூ.10 கோடியும், கிறிஸ்துமஸ் பம்பர் முதல் பரிசு ரூ.16 கோடியும் ஆகும். ஓணம் பம்பர் அதிர்ஷ்டசாலி அனூப் அனுபவித்த சிரமங்களை அறிந்த இந்த அதிர்ஷ்டசாலிகள் இருவரும் தங்களது பெயர், விவரங்களை தயவு செய்து வெளியிட வேண்டாம் என்று கேரள லாட்டரித் துறை அலுவலகத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால் இவர்களது பெயர், விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் ஓணம் பம்பர் அதிர்ஷ்டசாலியான அனூப் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் ஒரு லாட்டரிக் கடையை தொடங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியது: ரூ.25 கோடி கிடைத்த பின்னரும் நான் வழக்கம் போல ஆட்டோ ஓட்டத் தொடங்கினேன். என்னுடைய ஆட்டோவில் ஏறிய சிலர் பணம் தர மறுத்தனர். கோடீஸ்வரனுக்கு எதற்கு பணம் என்று கூறி பணம் தராமலேயே சென்றனர். இதனால் ஆட்டோ ஓட்டுவதை நிறுத்தி விட்டேன். இதன் பிறகு எனக்கு வாழ்வு தந்த லாட்டரியை வைத்து தொழில் தொடங்க தீர்மானித்தேன்.

இதனால் தான்  லாட்டரி கடையை தொடங்கினேன்.உதவி கேட்டு வருபவர்களிடம் என்னிடம் பணம் இல்லை என்று கூறி அவர்களுக்கு திரும்பிச் செல்ல மட்டும் பணம் கொடுத்து அனுப்பி வைக்கிறேன். பணத்தை வாங்கிய பின்னரும் எனக்கு சாபம் கொடுத்து விட்டுத் தான் அவர்கள் செல்கின்றனர். பரிசு தொகையில் பெரும்பங்கு நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் போட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Kerala , Kerala, Rs 25 crore, bumper prize, lottery shop, launched
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...