×

யு-19 உலக கோப்பை இலங்கை அணியை வீழ்த்தியது இந்தியா

பாட்செப்ஸ்ட்ரூம்,: ஐசிசி மகளிர் யு-19 உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் சிக்ஸ் பிரிவில் இலங்கை யு-19 அணியுடன் மோதிய இந்தியா யு-19 அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சென்வெஸ் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இலங்கை அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 59 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

கேப்டன் விஷ்மி குணரத்னே 25 ரன், உமயா ரத்னாயகே 13 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இந்திய பந்துவீச்சில் பார்ஷவி சோப்ரா 4, மன்னத் காஷ்யப் 2, டைடஸ் சாது, அர்ச்சனா தேவி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய இந்தியா யு-19 அணி 7.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன் எடுத்து எளிதாக வென்றது. ஷபாலி 15, ஷ்வேதா 13, ரிச்சா 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர். கேப்டன் சவும்யா திவாரி 28 ரன், த்ரிஷா (0) ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினர். இந்தியா 2 புள்ளிகள் பெற்றது.


Tags : India ,Sri Lanka ,U-19 World Cup , India defeated Sri Lanka in the U-19 World Cup
× RELATED இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு