யானை இபிஎஸ்சுடன் சுண்டெலி ஓபிஎஸ்சை ஒப்பிடுவது அவமானம்: திண்டுக்கல் சீனிவாசன் ‘நக்கல்’

தேனி: ‘யானையுடன் சுண்டெலியை ஒப்பிடுவது எப்படி சரியாகும்? இபிஎஸ்சோடு ஓபிஎஸ்சை ஒப்பிடுவதை நாங்கள் அவமானமாக கருதுகிறோம்’ என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நக்கலாக கூறியுள்ளார். தேனி மாவட்டம், கூடலூரில் இன்று நடக்க உள்ள அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார். அவருக்கு வரவேற்பு அளிப்பதற்கான இடங்களை தேர்வு செய்வதற்கான பணிகள் நேற்று நடந்தது. இந்த இடங்களை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

அப்போது திண்டுக்கல் சீனிவாசன் அளித்த பேட்டியில், ‘‘எங்களை பொறுத்தவரை ஓபிஎஸ்சுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.  இபிஎஸ்சோடு ஓபிஎஸ்சை ஒப்பிட்டு பேசுவதை நாங்கள் அவமானமாக கருதுகிறோம்.  யானையுடன் சுண்டெலியை ஒப்பிடுவது எப்படி சரியாகும்? சட்டப்படி அதிமுக கட்சி, அலுவலகம், வரவு செலவு, சின்னம் உள்ளிட்ட அனைத்தும்  எங்களிடம்தான் உள்ளது. 99.5% அதிமுக நாங்கள்தான்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் 100% வெற்றி பெறுவது உறுதி. ஓபிஎஸ் சிறிதாக குழு வைத்து பேசிக் கொண்டிருக்கிறார். நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அனைத்து ஆவணங்களும் நாங்கள் கொடுத்து விட்டோம். அதிகாரபூர்வமாக நாங்கள் தான் வெற்றி பெறுவோம். ஓபிஎஸ் துண்டு பேப்பர் வைத்துக்கொண்டு அனைத்தும் நான் தான் என்று கூறி வருகிறார்’’ என நக்கலாக கூறினார். அவரது பேட்டி அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: