×

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி ஆசிரியைக்கு 2 ஆண்டு சிறை; ரூ.34 லட்சம் அபராதம்: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு

பூந்தமல்லி: ஆவடியில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் வரை மோசடி செய்த பள்ளி ஆசிரியைக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.34.47 லட்சம் அபராதமும் விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை அடுத்த ஆவடி விவேகானந்தாநகர் பல்லவன் தெருவை சேர்ந்தவர் ஜாஸ்மின் (52). ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இவர், 2014ம் ஆண்டில் இருந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறைந்த மளிகை பொருள் தருவதாக கூறி சீட்டு நடத்தி வந்துள்ளார்.  இவரை நம்பி ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலர் மாதந்தோறும் பணம் கட்டி வந்துள்ளனர்.  அந்தவகையில் 500 பேரிடம் தீபாவளி சீட்டு என்ற பெயரில் ரூ.50 லட்சம் வரை வசூல் செய்து ஏமாற்றியுள்ளார்.

மேலும் இவருடன் பணியாற்றிய சக ஆசிரியை உஷா என்பவரிடம் ரூ.6 லட்சம் வாங்கி கடன் வாங்கி அதை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார்.  கடனாக கொடுத்த பணத்தை உஷாவும்,  சீட்டு கட்டியவர்களும் பலமுறை கேட்டும் பணத்தை கொடுக்காததால் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2015ம் ஆண்டு ஜாஸ்மினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1ல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டாலின், ‘தீபாவளி சீட்டு நடத்தியும் பணம் கடன் வாங்கியும் ஜாஸ்மின் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ 37.47 லட்சம் அபராதமும் விதிக்கிறேன்’ என தீர்ப்பில் கூறியுள்ளார்.

Tags : Diwali ,lottery ,Poontamalli , Teacher gets 2 years jail for cheating Diwali lottery; Rs.34 lakh fine: Poontamalli court verdict
× RELATED பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில்...