×

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கு தயார் செய்யும் வகையில் 30 ரகங்களில் 2.85 லட்சம் மலர் நாற்று நடவு

ஊட்டி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கு தயார் செய்யும் வகையில் 30 ரகங்களில் 2.85 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சியும் நடத்தப்படுகின்றன.

கோடை சீசனுக்காக ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்த பூங்காக்கள் தயார் செய்யும் பணிகள் மேற்கொள்வது வழக்கம். இதன் தொடர்ச்சியாக, தாவரவியல் பூங்காவில் அண்மையில் மலர் நாற்றுகள் நடவு பணி துவக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, குன்னூர் சிம்ஸ்பூங்காவிலும் பல்வேறு ரக மலர் செடிகள் நடவு செய்யும் பணிகளை தோட்டக்கலைத்துறை துவக்கி உள்ளது. தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி பங்ேகற்று மலர் செடிகள் நடவு பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பாத்திகளில் மலர் செடிகள் நடவு பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,``சிம்ஸ் பூங்காவில் கோடை சீசன் மற்றும் மே மாதத்தில் நடக்கும் பழக்கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வசதியாக ஆன்ட்ரினம், சால்வியா, பால்சம், பிகோனியா, மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, பேன்சி, பிளாக்ஸ், பெட்டூனியா, கேலன்டூலா, ஆஸ்டர், லுபின் உள்ளிட்ட 30 ரகங்களில் 2.85 லட்சம் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. ஐரோப்பாவை தாயகமாக கொண்ட ரெனன்குலஸ் மலர் நாற்றுகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது’’ என்றனர். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Coonoor Sims Park , Planting of 2.85 lakh flower seedlings of 30 varieties in preparation for summer season at Coonoor Sims Park
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா...