நரிக்குடி அருகே முள்ளிக்குடி கிராமத்தில் சாலை வசதி இல்லாத மயானம்: இறந்தவரின் உடலை வயல் வழியாக தூக்கிச் செல்கின்றனர்

காரியாபட்டி:  நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், வேளானேரி ஊராட்சியில் முள்ளிக்குடி கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மயானத்திற்கு பல ஆண்டுகளாக சாலை வசதியில்லை. இதனால், இறந்தவர்களின் உடல்களை விளைநிலம் வழியாக எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் முள்ளிக்குடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் உடல் நலக்குறைவால் இறந்துள்ளார்.

இதையடுத்து உறவினர்களும், கிராமத்தினரும் கோபாலகிருஷ்ணனின் உடலை மயானத்திற்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

மயானத்திற்கு முறையான சாலை இல்லாததால், இறந்தவரின் உடலை சுமார் ஒரு கிலோ மீட்டர் நெல் வயல் வழியாக தூக்கிச்சென்று இறுதி சடங்குகளை செய்து முடித்தனர். பல வருடங்களாக இறந்தவர்களின் உடல்களை வயல்வெளிகளில் தூக்கி சென்றுதான் அடக்கம் செய்து வருகின்றனர். எனவே, கிராம மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம், மயானத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: