×

கொடைக்கானலில் வனத்துறை சுற்றுலா தலங்களுக்கு பழைய நடைமுறைப்படி கட்டணம்: மாவட்ட வன அலுவலர் தகவல்

ெகாடைக்கானல்: கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பழைய நடைமுறைப்படியே கட்டணம் வசூலிக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் திலீப் தெரிவித்தார். கொடைக்கானல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை ஆகிய சுற்றுலா தளங்கள் உள்ளன. இப்பகுதிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பதற்கு முன்பு சுற்றுலா செல்பவர்களுக்கு தனித்தனியாக கட்டணங்கள் அதாவது ஒவ்வொரு சுற்றுலா இடத்திற்கும் தனித்தனியாக நுழைவு கட்டணம் வனத்துறையால் வசூலிக்கப்பட்டது.

மோயர் பாயிண்ட் பகுதியில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறுவர்களுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்பட்டது. குணா குகை பகுதியில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறியவர்களுக்கு 5 ரூபாயும் வசூலித்தது. தூண் பாறை பகுதியில் நுழைவு கட்டணமாக 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பைன் மர காடுகள் பகுதிக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது நேரம் உள்ளிட்டவகைகளை கருத்தில் கொண்டு ஒரு சில இடங்களுக்கு செல்லாமல் திரும்பி செல்லவும் வசதி இருந்தது.

இதனால் நுழைவு கட்டணம் செலுத்த தேவையில்லாமலும் இருந்தது. குறிப்பாக தூண் பாறை பகுதியில் பெரும்பாலான நேரங்களில் மேகங்கள் மறைத்தபடி இருக்கும். அந்த சூழலில் இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லாமலும், நுழைவு கட்டணம் செலுத்தாமலும் வேறு பகுதிக்கு சென்று விடுவார்கள். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நான்கு சுற்றுலா தஙளுக்கும் சென்று பார்த்தாலும் சரி, பார்க்க விட்டாலும் சரி நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 30 ரூபாயும், சிறியவர்களுக்கு 15 ரூபாயும் நுழைவு கட்டணமாக வனத்துறை நிர்ணயம் செய்தது.

மோயர் பாய்ன்ட, பைன் மரகாடுகள், குணா குகை, தூண்பாறை பகுதிக்கு செல்ல தனித்தனியே கட்டணம் தர தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. நான்கு பகுதிகளுக்கும் ஒரே கட்டணம் என்பதை பலர் வரவேற்ற நிலையில் ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்டணத்தை குறைக்கவும் கோரிக்கை விடுத்து இருந்தனர் மேலும் முழுமையாக சுற்றுலா தொழில் செய்யும் டாக்சி வேன் ஓட்டுநர்கள்- உரிமையாளர்கள், டிராவல்ஸ் உரிமையாளர்கள் உள்ளிட்டோருடன் வனத்துறையினர் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் கொடுக்கும் கவுண்டர் அமைக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் வாகன நெரிசல் ஏற்படும் சூழலும் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் கூடுதல் நுழைவு கட்டண கவுண்டர்கள் அமைக்கவும், நுழைவு கட்டணத்தினை குறைக்கவும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் கொடைக்கானல் வேன் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர் இந்த ஒரே முறை கட்டண வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்து இருந்தனர்.

மேலும் பழைய நடைமுறைபடியே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், பழநி தொகுதி எம்எல்ஏ ஐபி செந்தில்குமாரிடமும் சுற்றுலா தொழில் செய்வோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து நேற்று எம்எல்ஏவின் அறிவுரைப்படி, கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் ஆகியோரின் ஆலோசனைப்படி கொடைக்கானல் வனச்சரக மாவட்ட வன அலுவலர் திலீப் மற்றும் சுற்றுலா தொழில் செய்பவர்கள், டாக்ஸி, வேன், ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பழைய நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது.

பின்னர் வனச்சரக மாவட்ட வன அலுவலர் திலீப் கூறியதாவது: கொடைக்கானலை சேர்ந்த டாக்ஸி, வேன் ஓட்டுநர்கள் மற்றும் பலர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் முன்பு இருந்தது போலவே மோயர் பாயிண்ட், குணா குகை, தூண் பாறை ஆகிய 3 இடங்களிலும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும். பைன் மரக்காடுகளில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இவ்வாறு கூறினார்.

Tags : Kodaikanal ,Forest , Fees as per old procedure for forest tourist spots in Kodaikanal: District Forest Officer information
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்