×

திருவள்ளூர் அடுத்த தங்கானூர் கிராமத்தில் உயர் நீதிமன்ற சிறப்பு அனுமதியுடன் 3 நாள் சேவல் சண்டை தொடக்கம்

சென்னை: திருவள்ளூர் அடுத்த தங்கானூர் கிராமத்தில் உயர் நீதிமன்ற அனுமதியுடன் 3 நாள் சேவல் சண்டை தொடங்கியது. வீரத்தை வெளிப்படுத்தும் பறவையாக சேவல் போற்றப்படுகிறது. தமிழகத்தில் வீர விளையாட்டாக சிறப்பு பெற்ற சேவல் சண்டையில் சூதாட்ட புகார்களால் இப்போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் திருவள்ளூர் அடுத்த தங்கானூரில் கடந்த 25 ஆண்டுகளாக சேவல் போட்டிகள் நடந்து வருகிறது. இதனால், இந்த ஆண்டும் கிராம மக்களின் பொழுதுபோக்கு மட்டுமின்றி மனதுக்கு உற்சாகத்தையும் ஏற்படுத்தும் வகையில் சேவல் சண்டை போட்டிக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி சிறப்பு அனுமதி பெற்றனர்.

இதை தொடர்ந்து, தங்கானூர் கிராமத்தில் சேவல் சண்டை போட்டிகள் துவங்கியது. இந்த போட்டிகளில் பங்கேற்க சேவல் வளர்ப்போர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பிற மாநிலங்களிலிருந்தும் சேவல் போட்டி நடைபெறும் களத்தில் குவிந்தனர். போட்டியில் பங்கேற்க வந்தவர்கள் சேவல் சண்டை போட்டி நிர்வாகத்திடம் ரூ.500 செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்துக்கொண்டு சேவல்கள் வகைகள், எடையைப் பொறுத்து சேவல் மோதலுக்கு அனுமதிக்கப்பட்டது. குறிப்பாக சேவலின் தலையில் இருக்கும் பூவை பொறுத்து குருவிப்பூ சேவல், மத்தாப்பூ சேவல், தவக்களைப்பூ சேவல், கத்திப்பூ சேவல், ஊசிப்பூ சேவல் ஆகிய  வகைகளும் இதேபோல் வெள்ளைக்கால், பேய்கருப்பு, பசுப்புக்கால், பூதக்கால், முகைக்கால், கருங்கால் ஆகிய வகைகள் பிரித்து போட்டிக்கு விடப்படுகிறது. போட்டியில் பங்கேற்கும் சேவல்களுக்கு ஒருமணி நேரத்தில் முதல் 20 நிமிடங்கள் களத்தில் இறக்கிவிட்டு மோதவிடுகின்றனர்.

அடுத்து 20 நிமிடங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் களத்தில் இறக்கி மோதவிடுகின்றனர். சேவல்கள் ஒன்றுக்கொன்று சிலுப்பி பறந்து, பறந்து தாக்கிக்கொண்டன. மோதிக்கொள்ளும்போது வட்டத்தை தாண்டி வெளியில் சென்றாலோ அல்லது மண்ணை தொட்டாலோ அந்த சேவல் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படும். போட்டிக்கு தயார் செய்த சேவல்களுடன் ஏராளமானோர் தங்கானூர் கிராமத்தில் குவிந்து தங்கள் சேவல்களை மோதவிடுகின்றனர். நேற்று முதல்  மூன்று நாட்கள் இப்போட்டிகள் நடைபெற உள்ளது. சேவல் சண்டை போட்டிகளை பார்த்து ரசிக்க ஏராளமானோர் தங்கானூர் கிராமத்தில் குவிந்து வருவதால் சேவல் போட்டி களைகட்டி உள்ளது. முதல் பரிசு பெறும் சேவல் உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளும், 2ம் இடத்தை பிடிக்கும் சேவல் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்படும் என போட்டி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : High Court ,Thanganur ,Tiruvallur , A 3-day cockfight begins with the special permission of the High Court in Thanganur village next to Tiruvallur
× RELATED ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில்...