×

வனத்துறைக்கு உட்பட்ட நிலாவூர் பகுதியில் உள்ள சூசைட்பாயிண்ட்டில் பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

ஏலகிரி: ஏலகிரி மலையில், வனத்துறைக்கு உட்பட்ட நிலாவூர் பகுதியில் உள்ள சூசைட் பாயிண்ட் சுற்றுலா தலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என   சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் போன்று வளர்ச்சியுற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. ஏலகிரி மலையில் அரசுக்கு சொந்தமான சுற்றுலா தலங்களும், தனியாருக்கு சொந்தமான சுற்றுலா தலங்களும் உள்ளன. இம்மலையில் பத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. அதனால், இங்கு  சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

ஏலகிரி மலையில் சிறந்த  முக்கிய சுற்றுலா சுற்றுலா தளங்களான படகு இல்லம், சிறுவர் பூங்கா, அதன் அருகில் இயற்கை பூங்கா, மூலிகை பண்ணை, படகு செல்லும் சாலையில் சாகச விளையாட்டு பகுதி, வனத்துறைக்கு உட்பட்ட மங்கலம் சுவாமிமலை, செல்பி பார்க், பாண்டேரா பார்க் (பறவைகள் சரணாலயம்), ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, ஸ்ரீகதவநாச்சி அம்மன் திருக்கோயில், உள்ளிட்டவை இருக்கின்றன. மேலும் அரசு சார்பில் 100 ஏக்கரில் பொட்டானிக்கல் கார்டன், 7 ஏக்கரில் சாகச விளையாட்டு தளம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மலையில் உள்ள சுற்றுலா தலத்தினை காண வெளிநாடு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தோடு வந்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நிலாவூர் மலை பகுதியில் வனத்துறைக்கு உட்பட்ட இடத்தில் சூசைட் பாயிண்ட் அமைந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான முறையில் விபத்து ஏற்படும் பகுதியாக அமைந்துள்ளது. இங்கு அனுமதி இன்றி சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் இருந்து ஜவ்வாது மலை பிரதேசத்தை காண முடிகிறது. குசிலாப்பட்டு, பெருமாபட்டு உள்ளிட்ட திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயத்திற்கு செல்லும் சாலை பகுதிகளில் உள்ள சமவெளிகளை காண முடிகிறது. இதனைக் காண பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு மது பிரியர்கள் அப்பகுதிக்கு வந்து மது அருந்துவதாகவும், கூறப்படுகிறது.

இது பற்றி சுற்றுலா பயணிகள் கூறியதாவது: வனத்துறைக்குட்பட்ட சூசைட் பாயிண்ட் தளத்தினை சீரமைத்து அப்பகுதியில் பாதுகாப்பு கம்பி வளையங்கள்  நிறுவப்பட்டு   சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் எனவும், தற்போது அனுமதி இல்லாமல் செல்லும் சுற்றுலா பயணிகளிடம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் சுற்றுலா பயணிகள் இடையே கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், வனத்துறை அதிகாரிகளும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக சூசைட் பாயிண்ட் தளத்தில் பாதுகாப்பு வளையங்கள் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nilavur , Security ring to be set up at suicide point in Nilavur area under forest department: Tourists demand
× RELATED 3 கன்றுகளை ஈன்ற பசு