×

கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியருக்கு கத்திக்குத்து 2 பேர் சிறையிலடைப்பு

தண்டையார்பேட்டை: சாலையில் லாரியை நிறுத்தி கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரது கையில் கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிந்தாதிரிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் வினோத்குமார் (24). இவர், புதுவண்ணாரப்பேட்டை 40வது வார்டில் கழிவுநீர் அகற்றும் லாரியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மதியம் புதுவண்ணாரப்பேட்டை அம்மணியம்மன் தோட்டம் பகுதியில், கழிவுநீர் அடைப்பை லாரி மூலம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, பைக்கில் வந்த 2 பேர், லாரியை வழியில் ஏன் நிறுத்தி வைத்துள்ளாய் என்று கேட்டு வினோத்குமாரிடம் சண்டை போட்டனர். இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள், வினோத் குமாரின் கையில் கத்தியால் குத்தியுள்ளனர். இதில், காயமடைந்த வினோத்குமார் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், 2 வாலிபர்களில் ஒருவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.  

பின்னர், புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த சதீஷ் மற்றும் கத்தியால் தாக்கப்பட்ட வினோத்குமாரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து சதீஷிடம் விசாரணை நடத்தினர். அதில், புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த சதீஷ் (23). இவர், மீது அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதும், அவரது நண்பன் தண்டையார்பேட்டை துர்காதேவி நகரை சேர்ந்த மோகன் (24). இவர் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதும் தெரிந்தது. கைது செய்யப்பட்ட மோகனை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 


Tags : 2 jailed for stabbing sewage disposal worker
× RELATED போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது