திருவட்டார் அருகே பரபரப்பு; நரசிம்மர் கோயிலில் கொள்ளை: ஏணி வைத்து மேற்கூரையில் ஏறி ஓட்டை பிரித்து உள்ளே குதித்தனர்

குலசேகரம்: 108 வைணவ திருத்தலங்களில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலும் ஒன்று. இங்கு சுமார் 420 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6ம்தேதி திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடந்தது. இதன்மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த கோயில் வளாகத்தின்  தென்கிழக்கு மூலையில் நரசிம்மர் கோயில் மற்றும் மடம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயில் கேரளா மாநிலம் திரிச்சூர் மடத்தினரால் நிர்வகிக்கப்பட்டு  வருகிறது. இந்த கோயிலில் அன்னபூர்னேஷ்வரி, யோக நரசிம்மர், லட்சுமி,  முருகர் என 4 விக்ரகங்கள் உள்ளன.

தினமும் விக்ரகங்களுக்கு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். இன்று காலை கோயில் அர்ச்சகர் வழக்கம்போல் நடை திறந்து கோயில் உள்ளே சென்றார். அப்போது கோயிலின் மேற்கூரையில் ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோயில் உள்ளே இருந்த 2 உண்டியல்கள் திறக்கப்பட்டு சில்லறை காசுகள் சிதறிக்கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த கோயில் மேலாளர் ஜோதீஸ் உடனடியாக திருவட்டார் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கோயிலை பார்வையிட்டனர்.

அப்போது, நேற்று இரவில் கோயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஏணி வைத்து கோயில் மேற்கூரையில் ஏறியுள்ளனர். பின்னர் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கியுள்ளனர். மேலும் அருகே உள்ள மடத்தில் வைக்கப்பட்டிருந்த அரிசி பானைக்குள் கோயில் உண்டியல் இருந்த அறையின் கதவுக்கான சாவி இருப்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துள்ளதால், அவற்றை எடுத்து அந்த அறையை திறந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து ரூபாய் நோட்டுகளை மட்டும் திருடியுள்ளனர். சில்லறை காசுகளை அப்படியே விட்டுவிட்டனர்.

மேலும் கோயிலின் சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகும் அறைக்கு சென்று அங்கிருந்த டிவிடிகளை எடுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். ஆனால் அதே அறையில் இருந்த குத்துவிளக்குகளை அவர்கள் திருடவில்லை. இந்த நிலையில் தற்போது கைரேகை நிபுணர்களும் கோயிலுக்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் ஆதிகேசவ பெருமாள் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதனடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

நரசிம்மர் கோயிலின் மேற்கூரையில் ஏணிவைத்து ஏறிய கொள்ளையர்கள் அங்கிருந்த 8 ஓடுகளை பிரித்துள்ளனர். அவற்றை கீழே போட்டு உடைக்காமல் ஒவ்வொன்றாக கீழே கொண்டுவந்து அடுக்கியுள்ளனர். அதில் ஒரு ஓடு கூட உடையவில்லை. எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் 2க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: