கஞ்சா விற்ற வடமாநில பெண்கள் கைது: 12 கிலோ பறிமுதல்

அம்பத்தூர்: சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ள மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு  போலீசாருக்கு அம்பத்தூர் அருகே வடமாநில பெண்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில், கொரட்டூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வடமாநில பெண்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், இருவரும் மேற்குவங்காளத்தை சேர்ந்த அனிமா தாஸ் (46), சந்தியா தாஸ் (34) என்பதும், அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மண்ணூர்பேட்டை, கொரட்டூர், பாடி ஆகிய பகுதிகளில் வேலை செய்து வரும் வட மாநில நபர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் கொண்டு வந்த பையை சோதித்ததில் அதில் கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: