×

கொத்தவால்சாவடி பகுதியில் முதியவரை காலால் எட்டி உதைத்த உதவி ஆய்வாளர் அதிரடி மாற்றம்

தண்டையார்பேட்டை: கொத்தவால்சாவடியில் பாதுகாப்பு பணியின்போது, முதியவரை காலால் எட்டி உதைத்து தரதரவென இழுத்த உதவி ஆய்வாளரை உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். பாரிமுனை அடுத்த கொத்தவால்சாவடி பகுதியில் நேற்று முன்தினம் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக பிரமுகர் வெற்றிலை மாரிமுத்து என்பவர் ஏற்பாட்டில் அந்த பகுதி மக்களுக்கு உணவு, புடவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட செயலாளர் பாலகங்கா கலந்துகொண்டு உணவு வழங்கினார். இவற்றை வாங்குவதற்காக மக்கள் அதிக அளவு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த கொத்தவால்சாவடி உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் திடீரென கூட்டத்தில் இருந்த ஒரு முதியவரை தரதரவென இழுத்து காலால் எட்டி உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பார்த்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உடனடியாக, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். அதன்படி கொத்தவால்சாவடி ஆய்வாளர் தேவராஜ் உடனடியாக ராதாகிருஷ்ணனை கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் இருந்து விடுவித்தார். கடந்த 7ம் தேதி தான் ராதாகிருஷ்ணன் கொத்தவால்சாவடி காவல் நிலையத்திற்கு பணி மாறி வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உதவி ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சம்பவம் பூக்கடை சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kothawalchavadi , Assistant inspector who kicked an old man in Kothawalchavadi area, action change
× RELATED சவுகார்பேட்டையில் உரிய ஆவணமில்லாத ₹1 கோடி சிக்கியது