×

தனியார் மயம், பென்சன் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கிகள் 30,31ம் தேதி ஸ்டிரைக்: 28,29 விடுமுறையால் 4 நாட்கள் பரிவர்த்தனை முடங்கும் அபாயம்

சென்னை: நாடு முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் வருகிற 30, 31ம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம், திங்கள் மற்றும் செவ்வாய்கிழமையன்று வருகிறது. ஏற்கனவே சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை உருவாகியுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அகில இந்திய ஊழியர் சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, பென்சன் உயர்வு வங்கி சேவைக்கு தேவையான ஊழியர்கள் தேர்வு, வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, வங்கிகளின் வராக்கடன்களை வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடத்த போவதாக மத்திய அரசுக்கு சங்கங்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டதால் பொதுமக்களின் பணம் மற்றும் காசோலை பரிமாற்றம் பாதிக்கப்பட்டன. விடுமுறை முடிந்து இன்று தான் வங்கிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 10 நாட்களில் மீண்டும் 4 நாட்கள் வங்கிகள் மூடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில், வருகிற 30 மற்றும் 31-ம்தேதி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 28 மற்றும் 29-ம் தேதி வங்கி விடுமுறையாகும். விடுமுறை நாட்களை தொடர்ந்து போராட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதால், மேலும் 4 நாட்கள் வங்கிகள் செயல்படாதநிலை உருவாகும். இதனால், தொழில், வர்த்தக நிறுவனங்கள், சிறு தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஒரே மாதத்தில் 8 நாட்கள் வங்கி சேவை பாதிக்கப்பட்டால் மக்களின் பணம், காசோலை பரிமாற்ற நடவடிக்கைகளில் கடுமையாக தேக்கம் ஏற்படக்கூடும். ஏ.டி.எம். சேவைகள் இருந்தாலும் கூட அவை முழுமையான அளவு செயல்படும் என்று கூற இயலாது.

இந்த போராட்டம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாஜலம் கூறியதாவது:
வங்கி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறையால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்படுகிறது. அதனால் போதுமான அளவிற்கு ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி சுமூக தீர்வு காணாவிட்டால் திட்டமிட்ட படி வேலை நிறுத்தம் நடைபெறும். 4 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடும் நிலை ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் குறிப்பாக ஓய்வூதியதாரர்கள் கடுமையாக  பாதிக்கப்படுவார்கள். மாத இறுதிநாள் என்பதால் அரசு ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இதனால், காசோலை பரிவர்த்தனை பல ஆயிரம் கோடி மதிப்பில் தேங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Benson , Private Mayam, Pension Hike, Strike on 30th, 31st, Banks Strike
× RELATED பரமக்குடி தாலுகா அலுவலகத்தில்...