×

வருசநாடு மூல வைகை ஆற்றில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

வருசநாடு : தேனி மாவட்டம் மூலவைகையாற்றில் கழிவுநீர் கலப்பதால் குடிநீர் மாசடைகிறது. இதனை தடுக்க கரையோர கிராமங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகையாறு உற்பத்தியாகிறது. வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் மூல வைகையாற்றில் நீர்வரத்து காணப்படும். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மூல வைகையாறு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

மேலும் மூல வைகையாற்றை சார்ந்து ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம், சிங்கராஜபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் மூல வைகையாற்றில் கலந்து வருகிறது. இதனால் மூல வைகையாற்று நீர் மாசடைந்து வருகிறது.

ஒவ்வொரு வருடமும் மார்ச், ஏப்ரல், ஜூலை மாத இறுதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை மூல வைகை ஆறு வறண்ட நிலையில் காணப்படும். அதுபோன்ற நேரங்களில் மூல வைகையாற்றில் கழிவுநீர் குளம் போல தேங்கி காணப்படும். பின்னர் மழை பெய்து நீர் வரத்து ஏற்படும் காலங்களில், அதனுடன் கழிவு நீரும் சேர்ந்து விடுகிறது. இதனால் குடிநீர் மாசடைகிறது. இந்த கழிவுநீர் கலந்த குடிநீரை குடிப்பதால் பொதுமக்களுக்கு டைபாய்டு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

எனவே மூல வைகையாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் அனைத்து கிராமங்களிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Vaigai River ,Varanadu Source Vaigai River , Varusanadu: Drinking water is getting polluted due to mixing of sewage in Moolavaigai river in Theni district. Sewage treatment in coastal villages to prevent this
× RELATED மானாமதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி இறங்கினார் வீரஅழகர்