×

டி.பி. சத்திரம் சுடுகாடு அருகே போதையில் ரவுடிகள் பயங்கர மோதல்: பொதுமக்கள் பீதியில் ஓட்டம்

அண்ணாநகர்: டி.பி. சத்திரம் சுடுகாடு அருகே நடுரோட்டில் ரவுடிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது. சென்னை டி.பி. சத்திரம் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே நடுரோட்டில் குடிபோதையில் இருவர் ஒருவரை ஒருவர் மாறிமாறி சரமாரியாக தாக்கி கொண்டதில் ஒருவர் தலையில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் டிபி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ஆய்வாளர் சக்தி வேலாயுதம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒருவரை மடக்கி பிடித்தனர். படுகாயத்துடன் இருந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது தலையில் 5 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், படுகாயமடைந்தவர் டிபி சத்திரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ரவுடி எழிலரசன் (49) என்பதும், இவர் மீது கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு டிபி சத்திரம் காவல்நிலைய போலீசாரை தாக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு 2 நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவரது உறவினர் ஒருவர் சாவுக்கு சென்றுவிட்டு டிபி சத்திரம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் இருந்துள்ளார். அப்போது சிறையில் இருக்கும்போது பழக்கம் ஏற்பட்டு கூட்டாளியான அம்பத்தூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சதீஷ் (28) என்பவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர், போதை குறைந்ததும் மீண்டும் மது அருந்த சதீஷ் பணம் கேட்டுள்ளார்.

அதற்கு எழிலரசன், ‘நானே சிறையில் இருந்து இப்பதான் வெளியில் வந்தேன். என்னிடம் பணம் இல்லை’ என கூறியுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சதீஷ், சரமாரியாக எழிலரசனை தாக்கியுள்ளார். நடுரோட்டில் ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக்கொண்டதை பார்த்து அப்பகுதி மக்கள் ஓட்டம் பிடித்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சதீஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்தபோது, பிரபல ரவுடி சதீஷ் மீது ஏற்கனவே அம்பத்தூர், ஐசிஎப் ஆகிய காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி உள்பட 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சதீஷை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் டிபி சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : D.P. ,Chatram Sudugadu , D.P. Terrible clash between intoxicated raiders near Chatram Sudugadu: Citizens flee in panic
× RELATED எடைகுறைப்பு சிகிச்சையின்போது பலி:...