106வது பிறந்தநாளையொட்டி எம்ஜிஆர் சிலைக்கு இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக மரியாதை செலுத்தினர்: தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை

சென்னை: எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது உருவ சிலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் நேற்று தனித்தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாளையொட்டி நேற்று காலை 11 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அதிமுக கொடியை ஏற்றி வைத்து, அங்கே கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதை தொடர்ந்து அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர், கட்சி தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் பிறந்தநாளை 106 கிலோ எடையில் பெரிய கேக் வெட்டி கொண்டாடினர். பிறகு, விபத்தில் மரணம் அடைந்த செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்த எஸ்.செல்லப்பன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் மற்றும் டெல்லியில் அதிமுக அலுவலகத்தில் பணியாற்றி மரணமடைந்த என்.சந்திரசேகரன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்திற்கான நிதி உதவியும் எடப்பாடி வழங்கினார். அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் கலைப்புனிதன் எழுதிய ‘மக்கள் திலகம் எம்ஜிஆரின் மாண்புகள்’ என்ற நூலையும் எடப்பாடி வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதேபோன்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு கூடி இருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, அங்கு நடந்த விழாவில் எம்ஜிஆர் பற்றிய புத்தகங்களை எழுதிய நூலாசிரியர்கள் 17 பேரை ஓ.பன்னீர்செல்வம் கவுரவித்தார்.

நிகழ்ச்சிகளில் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும்ஜெ.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர். அதேபோன்று, தமிழக அரசின் சார்பில், சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: