சுற்றுலா துறை சார்பில் பொங்கல் விழா தலையில் கரகம் வைத்து ஆடி கலெக்டர் ராகுல்நாத் அசத்தல்: ஆடி, பாடி மகிழ்ந்த வெளிநாட்டு பயணிகள்

சென்னை: தமிழக சுற்றுலாத் துறை சார்பில், ஒவ்வோர் ஆண்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக பொங்கல் நாட்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு சுற்றுலாத் துறையும், முட்டுக்காடு தக்ஷிணசித்ரா இணைந்து பொங்கல் விழாவை நேற்று முன்தினம் முட்டுக்காட்டில் நடத்தின. நிகழ்ச்சிக்கு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமை தாங்கினார். மால்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். முன்னதாக, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஒரு பஸ்சில் ஏற்றிக் கொண்டு தக்ஷிணசித்ராவிற்கு அழைத்து சென்றனர். தாரை தப்பட்டை, மேளதாளம் முழங்க வெளிநாட்டு பயணிகளுக்கு சங்கு மாலை அணிவித்தும், நெற்றியில்குங்குமமிட்டும் சிறப்பாக வரவேற்றனர். இதனை தொடர்ந்து, பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைத்தனர்.

இதையடுத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், உற்சாக மிகுதியில் வெளிநாட்டு பயணிகள் தலையில் கரகம் வைத்து ஜாலியாக ஆடினர். அவர்களுடன், மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், அவர்களின் நடனத்திற்கு ஏற்ப ஆடியது அனைவரையும் கவர்ந்தது. அப்போது, அங்கு போடப்பட்டிருந்த வண்ண கோலங்களை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, அனைவருக்கும் பொங்கல் எப்படி தயாரிப்பது என்று ஆங்கிலத்தில் விளக்கி கூறப்பட்டது. இதையடுத்து, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இசை நாற்காலி போட்டி, கண்களை கட்டிக்கொண்டு உரியில் தொங்குகின்ற பானை உடைக்கும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டன. அதில், வெற்றி பெற்ற பயணிகளுக்கு பரிசுகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.

Related Stories: