×

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப இன்று 1187 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகளின் வசதிக்கேற்ப போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை உட்பட பிறபகுதிகளில் இருந்து கடந்த 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டநெரிசலின்றி பயணம் மேற்கொண்டனர்.

இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்து துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆம்னி பேருந்துகள், ரயில்கள், விமானங்கள், கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக லட்சகணக்கானோர் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்களுக்கு இன்று முதல் பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

குறிப்பாக, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதியில் இருந்து கூடுதலாக  பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கும்பகோணம், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், ஓசூர், தர்மபுரி, பெங்களூர் உள்பட பல நகரங்களில் இருந்தும் சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன்  கூடுதலாக 1187 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3287 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதேபோல சென்னையை தவிர்த்து பிற நகரங்களுக்கு 1525 சிறப்பு பேருந்துகளை இன்று இயக்க போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும், பிற நகரங்களுக்கும் இதுவரையில் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சிறப்பு பேருந்துகளை இயக்குவதால் கோயம்பேடு  பேருந்து நிலையம், பெருங்களத்தூர், தாம்பரம், பூந்தமல்லி பேருந்து நிலைய பகுதிகளில் நெரிசல் ஏற்படாத வண்ணம் போக்குவரத்து காவல்துறை தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப நாளை 1941 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 1206 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Chennai ,Pongal festival , Pongal Festival, People who have gone to hometown, special buses will run from today
× RELATED அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா...