×

நாளை மகர விளக்கு பூஜை சபரிமலையில் பக்தர்கள் குவிகின்றனர்: 2 நாள் ஆன்லைன் முன்பதிவு ரத்து

திருவனந்தபுரம்: சபரிமலையில் பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை நாளை நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இன்றும், நாளையும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (31ம் தேதி) முதல் மகர விளக்கு கால பூஜைகள் தொடங்கின.

மண்டல காலத்தை விட மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தது. தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்து நிற்கும் சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை நாளை (14ம் தேதி) நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து விட்டன. மகர விளக்கு பூஜைக்கு முன்னதாக நடைபெறும் எருமேலி பேட்டை துள்ளல் கடந்த 11ம் தேதி நடைபெற்றது.

மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணம் நேற்று பந்தளத்தில் இருந்து புறப்பட்டது. நாளை மாலை 6.30 மணியளவில் திருவாபரணம் சன்னிதானத்தை அடையும். அதன் பிறகு திருவாபரணம் ஐயப்ப விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெறும். இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி தெரியும்.

மகர ஜோதியை தரிசிப்பதற்காக பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். கடந்த 11ம் தேதி எருமேலியில் பேட்டை துள்ளல் நடத்திய பின்னர் அங்கிருந்து திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். இவர்கள் மகரஜோதியை தரிசிப்பதற்காக சபரிமலையில் ஆங்காங்கே குடில் கட்டி தங்கி உள்ளனர். மகரஜோதியை தரிசித்த பின்னரே இவர்கள் அனைவரும் சபரிமலையில் இருந்து ஊர் திரும்புவார்கள்.

இன்று காலை 11 மணியுடன் நெய்யபிஷேகம் நிறுத்தப்பட்டது. இதன் பிறகு தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் மகரவிளக்கு பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் சுத்திக்கிரியைகள் நடைபெறும். தொடர்ந்து 25 கலச பூஜையும், களபாபிஷேகமும் நடைபெறும்.

ஆன்லைன் முன்பதிவு ரத்து
மகரவிளக்கு பூஜை தினத்தன்று சபரிமலையில் நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீஸ் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஏடிஜிபி அஜித்குமார் தலைமையில் ஐஜி ஸ்பர்ஜன் குமார், டிஐஜி நிஷாந்தினி ஆகியோர் மேற்பார்வையில் சபரிமலையில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சன்னிதானத்தில் மட்டும் 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக இன்றும், நாளையும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரூ.2.25 கோடிக்கு அரவணை விற்பனை
சபரிமலையில் அரவணை பிரசாதத்தில் தரமில்லாத ஏலக்காய் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்தது. தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி விற்பனை நிறுத்தப்பட்டது. இதனால் ரூ.6.50 கோடி மதிப்புள்ள அரவணை பாயசம் வீணானது.  இதற்கிடையே ஏலக்காய் இல்லாமல் அரவணை தயாரிக்கும் பணி உடனே தொடங்கப்பட்டது. நேற்று அதிகாலை 3.30 மணி முதல் புதிய அரவணை பாயச விற்பனை தொடங்கியது. ஒரு நாளில் 2.40 லட்சம் டன் அரவணை உற்பத்தி செய்யப்படும். இவை அனைத்துமே நேற்று விற்பனையாகி விட்டது. இதன்மூலம் ஒரே நாளில் ரூ.2.25 கோடிக்கு மேல் அரவணை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 42 லட்சம் பக்தர்கள் தரிசனம்
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனால் பக்தர்கள் வருகை குறைந்தது. இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதால் மண்டல காலத்தில் நடை திறந்த அன்று முதல் சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர். மண்டல காலத்தில் தினமும் சராசரியாக 80 ஆயிரம் முதல் 85 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்தனர். ஆனால் மகரவிளக்கு காலத்தில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தது. தினமும் சராசரியாக 95 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இன்று காலை வரை சபரிமலையில் 42 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இன்றும், நாளையும் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Sabarimala ,Makar ,Lampu Puja , Makara Lampu Puja tomorrow, online booking cancellation,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...