×

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு விவசாயம் காக்க ‘தனி ஒருவன்’ மாட்டு வண்டி பயணம்: வழி நெடுக மக்கள் ஆதரவு

நெல்லை: விவசாய நாடான இந்தியாவில் விவசாயத்தை காக்க வலியுறுத்தி விவசாயி ஒருவர் தனி ஒருவராக கன்னியாகுமரியில் இருந்த காஷ்மீருக்கு மாட்டு வண்டி பயணத்தை மேற்கொண்டுள்ளார். வழிநெடுக தன்னை பொதுமக்கள் வரவேற்று வாழ்த்தி அனுப்புவதாக அவர் தெரிவித்தார். சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்தவர் சந்திரசூரியன் (35). பரம்பரை விவசாயியான இவருக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன. விவசாய நாடான இந்தியாவில் சமீபகாலமாக விவசாயத்திற்கான மதிப்பு குறைந்து வருகிறது. இதனால் பல விவசாயிகள் சொந்த நிலங்களை விற்கும் நிலை உருவாகிறது.

விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காத அதே நேரத்தில் இடைத்தரகர்கள் லாபம் அடைகின்றனர். லாபத்தில் கைகோர்ப்பவர்கள், விவசாயத்தில் நஷ்டம் ஏற்படும் போது யாரும் பங்கேற்பதில்லை. இன்றைய இளைஞர்களுக்கும் விவசாயத்தின் மீதான ஈர்ப்பு குறைந்து வருகிறது. இதுபோன்ற நிலையை மாற்ற எதிர்காலத்தில் விவசாயம் சிறப்படைவதற்காக வாலிபர் சந்திரசூரியன் தனி மனிதனாக மாட்டுவண்டியில் இந்தியா முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார். இதற்காக அவர் தனது மாட்டு வண்டி மற்றும் தனது வளர்ப்பு மாடானா ‘சிகப்பி’யுடன் குமரி முனைக்கு வந்தார்.

கடந்த ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினத்தில் அங்கிருந்து மாட்டு வண்டியில் தனது அகில இந்திய விவசாய விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார். தனது மாட்டு வண்டியில் விழிப்புணர்வு பயணம் குறித்த வாசகங்களை அச்சிட்டு வைத்துள்ளார். அவருக்கு வழிநெடுக விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்பு அளித்து வாழ்த்தி அனுப்புகின்றனர். நேற்று மாலை நெல்லை வந்த அவர் தாமிர பரணியில் தனது மாடு சிகப்பியை குளிப்பாட்டி சிறிது ஓய்வு கொடுத்தார். அப்போது சந்திரசூரியன் கூறியதாவது: விவசாயம் மீதான ஆர்வத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தவும், விவசாயத்தை காக்கவும் வலியுறுத்தி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

6 மாதங்களில் 12 மாநிலங்களை கடந்து காஷ்மீர் வரை செல்ல முடிவு செய்துள்ளேன். நாள் ஒன்றுக்கு 15 கிலோ மீட்டர் தூரம் மட்டும் பயணம் செய்கிறேன். இரவில் நகர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வண்டியை நிறுத்தி வண்டியிலேயே ஓய்வு எடுக்கிறேன். இதற்கு பெட்ரோல் பங்கில் உள்ளவர்கள் உதவுகிறார்கள். எனது இந்த மாட்டு வண்டி பிரசாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனது பிரசார பயணத்திற்கு யாரிடமும் எந்த எதிர்பார்ப்புமின்றி எனது பணத்தையே செலவு செய்துகொள்கிறேன்.

வழியில் கிடைக்கும் கேழ்வரகு, கூழ் போன்ற இயற்கை உணவுகளை உட்கொள்கிறேன். வழியில் சந்திப்பவர்கள் தாங்களாக முன்வந்து மாட்டிற்கு உணவு வாங்கித் தருகின்றனர். இது நெகிழச் செய்கிறது. எனது பயணத்தின் போது இயற்கை விவசாயம் குறித்தும், நமது நாட்டின் முதுகெழும்பு விவசாயம் என்றும் பிரசாரம் செய்கிறேன். எனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாட்டு வண்டியில் சோலார்மின்சாரம்
பயணம் மேற்கொள்ளும் சந்திரசூரியன் தனது மாட்டு வண்டியின் கூரைப்பகுதியில் சோலார் பிளேட்டுகளை பொருத்தியுள்ளார். அதில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் தனது செல்போனை சார்ஜ் செய்து கொள்கிறார். தனது பிரசார பயணத்தை தன் யூடியூப், வாட்ஸ்அப் தளத்திலும் பதிவு செய்கிறார். இவற்றை பார்ப்பவர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

Tags : Tani Oruvan ,Kanyakumari ,Kashmir , 'Tani Oruvan' cow cart journey from Kanyakumari to Kashmir to save agriculture: support from people along the way
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!