×

திருச்சியில் 157 ஏக்கரில் பிரம்மாண்ட விலங்கியல் பூங்கா

*  30 வகையான 500 விலங்குகள் பராமரிக்க திட்டம்
*  தமிழக அரசிடம் ரூ12 கோடி நிதி கேட்டு கடிதம்

திருச்சி: மத்திய மிருக காட்சி ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் வண்டலூரில் மிகப்பெரிய அளவிலான விலங்கியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் சேலம் குரும்பம்பட்டி, வேலூர் மாவட்டத்திலும் விலங்கியல் பூங்கா உள்ளது. வண்டலூரில் உள்ளது போல் பூங்காவை மாநிலத்தின் மையப்பகுதியான திருச்சியில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனை அமைக்க திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையம் என்ற இடத்தில் வனத்துறைக்கு சொந்தமான 157 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

விலங்கியல் பூங்கா அமைக்க கோடிக்கணக்கில் செலவாகும் என்பதால் அதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு கட்டங்களாக செயல்படுத்த முடிவு செய்தன. முதற்கட்டமாக பூங்கா அமைய உள்ள 157 ஏக்கர் பகுதியை சுற்றி 5 கி.மீ தூரத்திற்கு 2 மீட்டர் உயரமும், அதற்கு மேல் முள் கம்பிகளும் கொண்டு காம்பவுண்டு சுவர் அமைக்கும் பணி மத்திய, மாநில அரசு நிதியிலிருந்து தலா ரூ.40 லட்சம் என மொத்தம் ரூ.80 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகள் நிறைவு பெற்றது. மேலும் தமிழக அரசின் ரூ.2 கோடி நிதியில் 5 விலங்குகள் வசிப்பதற்காக வசிப்பிடம் கட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து அடுத்தகட்டமாக பூங்காவின் உள்கட்டமைப்பு வசதிகளான சாலை அமைத்தல், நிர்வாக அலுவலகம், அதிகாரிகள் குடியிருப்பு கட்டுதல், விலங்குகள் வசிப்பிடம், அவற்றிற்கான சிறப்பு மருத்துவமனை, குடிநீர் வசதி, சாலையோரம் நின்று விலங்குகளை மக்கள் பார்வையிட கூண்டு வசதி, மின்விளக்கு வசதி, உணவு விடுதி, கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் போன்றவற்றிற்காக மத்திய விலங்கியல் பூங்காவிற்கு அனுமதி அளிக்கும் ஆணையத்திற்கு விரிவான செயல் அறிக்கையை (மாஸ்டர் பிளான்) திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தயாரித்து கடந்தாண்டு அனுப்பி வைத்தனர். ஆனாலும் இதற்கான அனுமதியை மத்திய மிருககாட்சி ஆணையம் வழங்கவில்லை.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 157 ஏக்கர் பரப்பிலான இந்த விலங்கியல் பூங்கா குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 பிரிவுகளாக பிரிக்கப்படும். இதில் குறிஞ்சி பகுதியில் மலைப்பகுதிகளில் வாழும் விலங்கு உள்ளிட்ட உயிரினங்களும், முல்லை பகுதியில் காடுகளில் வாழும் விலங்குகளும், மருதம் பகுதியில் வயல் சார்ந்த பகுதியில் வாழும் விலங்குகளும், நெய்தல் பகுதியில் கடலில் வாழும் உயிரினங்களும், பாலை பகுதியில் மணல் சார்ந்த பகுதிகளில் வாழும் விலங்குகளும் பராமரிக்கப்படும்.

இந்த பூங்காவில் சிங்கம், புலி, முதலை, மான், சிறுத்தை, முயல், செந்நாய், நீலகிரி குரங்கு, கரடி, காட்டு எருமை, சிங்கவால் குரங்கு, கழுதைப்புலி, வரிக்குதிரை, நரி போன்ற 30 வகையான விலங்குகளும், பல்வேறு வகையான பாம்புகள், பறவைகள் பராமரிக்கப்பட உள்ளன. இவற்றின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாக இருக்கும் வகையில் மத்திய விலங்கியல் பூங்கா ஆணையத்திற்கு கடந்தாண்டு அறிக்கை அனுப்பி உள்ளோம். விரைவில் உரிய அனுமதி கிடைத்ததும் பணிகள் தீவிரப்படுத்தப்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இதற்கான முதற்கட்ட பணிகளில் காம்பவுண்டு சுவர், கம்பி வேலி, பூங்காவை பார்வையிடும் பொதுமக்களுக்கான நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் கடந்தாண்டு முடிவடைந்தது.

அடுத்தகட்ட பணிகளை தொடங்குவதற்காக தமிழக அரசிடம் ரூ.12 கோடி நிதி கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதில் மத்திய விலங்கியல் பூங்காவிற்கான ஆணையம் அனுமதி கிடைத்தவுடன் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்பட்சத்தில் பணிகள் தொடர்ந்து நடைபெறும். தமிழக அரசின் நிதி கிடைத்தவுடன் மேலும் 5 விலங்குகள் வசிப்பிடம், குழந்தைகளுக்கான பூங்கா, பொதுமக்கள் நடைபாதை, உணவகம், வாகன நிறுத்துமிடம், பறவைகள் வசிப்பிடம் ஆகியவை அமைக்கப்படும். பணிகள் முடிந்த பின், முதற்கட்டமாக மான்கள், குள்ளநரி உள்பட 12 வகையான விலங்குகள், 9 வகையான பறவைகள், பாம்புகள் உள்ளிட்டவைகள் திருச்சி விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்படும்.

அதன்பின்னர், சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்படும். எனினும் நாங்கள் தயாரித்துள்ள சர்வதேச பூங்காவிற்கேற்ற மாஸ்டர் பிளான்படி இந்தாண்டுக்குள் (2023) முடியும் என தெரிகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, யானைகள் காப்பகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில் விலங்கியம் பூங்காவையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது பணிகள் தொய்வு குறித்து கேட்டறிந்து, ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடனே முதல்வரிடம் பேசி, தேவையான நிதி கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

யானைகள் காப்பகம்
விலங்கியல் பூங்கா அமையும் இடத்திற்கு மிக அருகிலேயே வனத்துறைக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தில் ‘யானைகள் மறுவாழ்வு மற்றும் துயர்மீட்பு மையம்‘ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு தனியாரால் பராமரிக்க முடியாத யானைகள், கோயில் யானைகள், உடல் நலம் குன்றிய யானைகள், மதம் பிடித்த யானைகள் போன்றவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது 13 யானைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

4வது விலங்கியல் பூங்கா
தமிழகத்தின் 4வது விலங்கியல் பூங்காவாக அமையவுள்ள இதற்கான பணிகள் முடிந்து விட்டால் ரங்கம், சமயபுரம், முக்கொம்பு, மலைக்கோட்டை போன்றவற்றை தொடர்ந்து திருச்சியின் மற்றொரு முக்கிய அடையாளமாகவும், மிகப்பெரிய சுற்றுலாத்தலமாகவும் இது விளங்கும்

Tags : Huge Zoological Park ,Trichy , 157 Acres Huge Zoological Park in Trichy
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...