×

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.3,000க்கு விற்பனை: கடும் பனிப்பொழிவால் விலை ‘கிடுகிடு’

திண்டுக்கல்: கடும் பனிப்பொழிவால் வரத்து குறைந்ததால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.3,000க்கு விற்பனையானது. திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டிற்கு திண்டுக்கல்லை சுற்றியுள்ள சின்னாளப்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, வெள்ளோடு, பிள்ளையார் நத்தம், கலிக்கம்பட்டி, அதிகாரிபட்டி உள்பட பல கிராமங்களில் இருந்து நாள்தோறும் விவசாயிகள் மல்லிகை, கனகாம்பரம், ஜாதி பூ, முல்லை பூ, சம்பங்கி, பன்னீர் ரோஸ் போன்ற பூக்களை விற்பனைக்காக கொண்டு வருவர்.

இங்கிருந்து தமிழகம் முழுவதும் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்வர். தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. வழக்கமாக 20 டன் பூக்கள் வரக்கூடிய இந்த மார்க்கெட்டிற்கு தற்போது 10 டன் பூக்களே வருகிறது. மேலும் பொங்கல் திருநாள் நெருங்குவதால் பூக்களின் தேவை அதிகரித்து, அதன் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.

நேற்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3,000, ஜாதிப்பூ ரூ.1,800, காக்கரட்டான் ரூ.2,000, முல்லைப்பூ ரூ.3,000, மரிக்கொழுந்து  ரூ.1,200க்கு விற்பனையானது. அனைத்து பூக்களின் விலையும் உச்சமடைந்திருப்பதால் பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Dindugul , Jasmine flower sold at Rs 3,000 per kg in Dindigul flower market: Price 'rocketed' due to heavy snowfall
× RELATED வாங்க ஆள் இல்லாததால் குப்பையில் கொட்டப்படும் பூக்கள்