பந்தலூர் அருகே நடப்பதற்கு வழியின்றி நீரோடை நடுவே மரத்துண்டுகளில்தற்காலிக பாலம் அமைத்த மக்கள்: அடிப்படை வசதியின்றி பரிதவிப்பு

பந்தலூர்:  பந்தலூர் அருகே தேவாலா அட்டி பிலாமூலா பகுதியில் நடப்பதற்கு வழியின்றி நீரோடை நடுவே தற்காலிகமாக, மரத்துண்டுகளால் பாலம் அமைத்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிறுபாலம் உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி பரிதவித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு தேவாலா பிலாமூலா பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சிறு குறு விவசாயிகளாகவும் அன்றாடம் கூலிவேலை செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக வசித்துவரும் இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான நடைபாதை, தெருவிளக்கு, குடிநீர் நீரோடையை கடந்து செல்வதற்கு சிறு பாலங்கள் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதையடுத்து நீரோடையின் குறுக்கே மரத்துண்டுகளை பயன்படுத்தி தற்காலிக பாலம் அமைத்து கடந்து செல்கின்றனர். யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ள இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் மேலும் பல்வேறு சிரமங்களை இப்பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

பள்ளி-கல்லூரி மாணவர்கள் தினந்தோறும் நடந்து செல்வதற்கும், நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும் முடியாமல் தவிக்கின்றனர். பசுந்தேயிலை உள்ளிட்ட விவசாய விளை பொருட்களை தலைச்சுமையாக சுமந்து சென்று வருகின்றனர் அதனால் கால தாமதம், கூடுதல் செலவு உள்ளிட்ட பல்வேறு  பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி அப்பகுதிக்கு சென்றபோது அப்பகுதி மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று  உரிய நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி தெரிவித்தார்.

Related Stories: